
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் உள்ள கிராமத்தில் அடுத்தடுத்து இருந்த அண்ணன், தம்பி வீடுகளில் 20 சவரன் நகைகளும், 2 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயும் திருடிய மர்ம நபர்களை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், மாதானம் வடபாதி தெருவைச் சேர்ந்த கணேசமூர்த்தி மனைவி கங்கையம்மாள் (65). கணேசமூர்த்தியின் தம்பி ராமமூர்த்தியின் மனைவி சந்திரா (60). இவர்கள் இருவரது வீடுகளும் அடுத்தடுத்து உள்ளன.
இந்த நிலையில், பொறையாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு இருவரும் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, இரண்டு வீடுகளின் கொல்லைப்புற கதவுகளும் உடைக்கப்பட்டிருந்தன.
அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, கங்கையம்மாள் வீட்டில் பீரோவிலிருந்த 10 சவரன் நகைகள் மற்றும் ரூ. 2 இலட்சம் ரொக்கமும், சந்திரா வீட்டில் பீரோவிலிருந்த 10 சவரன் நகை மற்றும் ரூ 20 ஆயிரம் ரொக்கமும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
பின்னர், இதுகுறித்து புதுப்பட்டினம் காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவலாளர்கள் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், நாகப்பட்டினத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்ததில் மோப்ப நாய் ஆச்சாள்புரம் செல்லும் சாலை வரை சென்று நின்றுவிட்டது.
பின்னர், இந்த திருட்டுச் சம்பவம் குறித்து புதுப்பட்டினம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.