தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தொடர்பாக தெலுங்கானா மாநில அதிகாரிகள் தமிழக பள்ளிகளில் நேரில் சென்று ஆய்வு செய்த நிலையில் தற்போது அந்த திட்டம் தெலுங்கானா மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் காலை உணவு திட்டம்
கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், மாணவர்களின் பள்ளி இடை நிற்றலை குறைக்கவும் மதிய உணவு திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுகள் வழங்கும் வகையில் புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில்,
இந்த திட்டத்தை மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்தும் விதமாக அரசு அதிகாரிகள் தமிழகம் வந்து நேரில் ஆய்வு செய்தனர். தெலங்கானா மாநில முதலமைச்சரின் செயலாளர் ஸ்மிதா சபர்வால், அரசு பழங்குடியினர் நலத் துறை, அரசுச் செயலாளர் டாக்டர்.கிறிஸ்டினா சொங்து , கல்வித் துறை அரசுச் செயலாளர் கருணா வக்காட்டி உள்ளிட்ட அதிகாரிகள் தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர்.
23 லட்சம் மாணவர்கள் பயன்
இதனையடுத்து தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம் தொடர்பாக தெலுங்கானா முதலமைச்சரிடம் அரசு அதிகாரிகள் எடுத்து கூறினார். இதனை தொடர்ந்து இந்த திட்டம் வருகிற 24 ஆம் தேதி தொடங்கப்பட இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தெலுங்கானா மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர். இந்த திட்டத்தின் படி 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை 27ஆயிரத்து 147 அரசு பள்ளிகளில் படிக்கும் 23 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் திங்கட்கிழமை இட்லி மற்றும் சாம்பார் அல்லது கோதுமை ரவா உப்மா மற்றும் சட்னி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு பட்டியல் என்ன.?
செவ்வாய் கிழமை பூரி மற்றும் உருளைக்கிழங்கு குருமா அல்லது தக்காளி சாதம் மற்றும் சாம்பார், புதன்கிழமை உப்புமா மற்றும் சாம்பார் அல்லது அரிசி ரவா கிச்சடி மற்றும் சட்னி ஆகியவ வழங்கப்படவுள்ளது. வியாழன் அன்று தினை இட்லி மற்றும் சாம்பார் அல்லது பொங்கல் மற்றும் சாம்பார், வெள்ளிக்கிழமை உக்கானி/போஹா/தினை இட்லி மற்றும் சட்னி அல்லது கோதுமை ரவா கிச்சிடி மற்றும் கிச்சிடி, மற்றும் சனிக்கிழமை பொங்கல் மற்றும் சாம்பார் அல்லது காய்கறி புலாவ் மற்றும் ரைதா/உருளைக்கிழங்கு குருமா வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்