
வேடசந்தூர்,
வேடசந்தூர் அருகே மழை வேண்டி, ஓரு வருடமாக பெற்றோர்கள் கொடுக்கும் பணத்தை சேர்த்துவைத்து மதுரைவீரனுக்கு மதுபாட்டில்கள், சேவல்களை படைத்து சிறுவர்கள் வழிபாடு நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது ஈ.சித்தூர் கிராமம். இந்த கிராமத்திலுள்ள விவசாய தோட்டத்தில் மதுரைவீரனுக்கு கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கட்டிடம் எதுவுமில்லை. இங்கு வைக்கப்பட்டுள்ள கற்கள், வேல் கம்புகளையே மதுரைவீரனாக பாவித்து அப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர். இந்த கிராம பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பெய்யவில்லை.
எனவே, அந்த ஊரைச் சேர்ந்த சிறுவர்கள் மழை வேண்டி குலதெய்வமான மதுரைவீரன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்த முடிவு செய்தனர். இதற்கான பணத்தை தாங்களே செலுத்தவும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஓராண்டாக பெற்றோர்கள் கொடுக்கும் பணத்தை சிறுவர்கள் சேர்த்து வைத்தனர். இந்த நிலையில் இம்மாதம் 30–ஆம் தேதி (அதாவது ஞாயிற்றுக்கிழமை) கோயிலில் வழிபாடு நடத்த முடிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மதுரைவீரன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடும், திருவிழாவும் நடத்தவுள்ளதாக பொதுமக்களிடம் தெரிவித்தனர். இதற்காக ஆகும் செலவிற்காக தாங்கள் ஓராண்டாக சேமித்து வைத்த பணத்தை கொடுத்து மேற்கொண்டு ஆகும் செலவுகளை பெற்றோரை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டனர். இதற்கு அவர்களும் சம்மதிக்கவே கோயிலில் திருவிழா நடந்தது.
முன்னதாக மேள தாளங்கள் முழங்க சேவல்கள் மற்றும் மதுபாட்டில்களை கோயில் வளாகத்திற்கு சிறுவர்கள் கொண்டுவந்தனர்.
சேவல்களை கோயில் வளாகத்தில் பலியிட்டனர். பின்னர் மதுபாட்டில்களுடன் சேவல்களை படையலாக வைத்து சிறுவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். சிறப்பு பூசைகளும் நடந்தது.
சிறுவர்களே பூசாரிகள் போல் பூசைகள் செய்து பொதுமக்களுக்கு படையல் வழங்கினர். தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. மழை வேண்டி சிறுவர்களே சிறப்பு வழிபாடு நடத்தியது அந்த கிராமத்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.