
கோயம்புத்தூர்
அதிமுக இரு அணிகளும் விரைவில் ஒன்று சேர்ந்து ஜெயலலிதாவின் ஆட்சியைத் தொடரும் என்று துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி சபாநாயகர் தெரிவித்தார்.
சென்னை செல்வதற்காக சேலத்தில் இருந்து கார் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்துக்கு நேற்று வந்தார்.
அப்போது, அவரை துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட ஆட்சியர் அரிகரன், நகர காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆகியோர் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், “குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த ஆட்சியர் தலைமையில் ஒரு தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்க் குழுவினர் 24 மணி நேரமும் தண்ணீர் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். தினமும் காலை 6 மணிக்கு குடிநீர் பிரச்சனை குறித்து பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தென்னை விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் நீரா பானத்திற்கு அனுமதி வழங்கிடும் வகையில் அரசு தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறது.
அ.தி.மு.க. இரு அணிகளும் இணைய வேண்டும் என சாதாரண தொண்டன் முதல் அனைவரும் விரும்புகிறார்கள். இதனால், இரு அணிகளும் இணைந்தே தீரும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேச்சுவார்த்தைக்கு எங்கள் அணி தயாராக உள்ளது. நேரடியாக பேசினால் மட்டுமே இரு அணிகளும் இணையும். அ.தி.மு.க. கட்சியும், ஆட்சியும் 100 ஆண்டுகள் வரை இருக்கும்.
இரு அணிகளும் இணைந்துவிட்டால் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்குகள் திரும்பப் பெறப்படும். சாதாரண தொண்டன் விரும்புவதை போல இரட்டை இலையை மீட்க அனைவரும் பாடுபட்டு வருகிறோம்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, வேகமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் விரைந்து செயல்படுத்தப்படும்.
அனைத்து மாநில முதல் மந்திரிகள் பிரதமர் மோடியை சந்தித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை மட்டுமின்றி மத்திய மந்திரிகளையும் சந்தித்து திட்டங்களை தமிழகத்துக்குக் கொண்டு வருகிறார்” என்று அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியது:
“அ.தி.மு.க.வில் இரு அணிகளும் பேச்சுவார்த்தை மூலம் விரைவில் ஒன்று சேருவோம். ஜெயலலிதாவின் ஆட்சி தொடரும். தி.மு.க.வை உயிர்த்தெழ விடமாட்டோம்’ என்றார்.
பின்னர், கோவை ராஜவீதி உள்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற மே தின விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்பு வழங்கினார்.