
‘ஆதார்’ இருக்கட்டும்… விரைவில் வருகிறது ‘பூதார் கார்டு’ …
தனிப்பட்ட நபரின் விவரங்களை கொண்டுள்ள ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்த நிலையில், தனித் தனி நிலம் குறித்த விவரங்களை உள்ளடக்கிய ‘பூதார்’ அட்டைகளை அறிமுகம் செய்ய ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் ஜென்மபூமி திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது-
தனிப்பட்ட நபர்களின் விவரங்களை உள்ளடங்கி ஆதார் கார்டு தற்போது மத்திய அரசின் உதய் அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திரமாநிலத்தில் தனித் தனி நிலங்கள் குறித்த தகவல்கள், அதன் உரிமையாளர்கள், விவரம், அளவு, மதிப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய ‘பூதார்’ அடையாள அட்டையை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதில் ஒவ்வொரு நிலத்துக்கும் பிரத்யேக அடையாள எண் தரப்படும்.
இந்த நிலம் குறித்த விவரங்களை அந்த அடையாள எண் கொண்டு உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும், அதேசமயம், அந்த அடையாள எண்ணின் ரகசியமும் பாதுகாக்கப்படும். மேலும், நிலம் குறித்த அறிய ‘ஜியோ டேகிங்’ முறை, அதாவது, நிலம் எங்கு இருக்கிறது என்பதை ஜி.எபி.எஸ். முறையில் அறிந்து கொள்ளும் வசதியும் செயல்படுத்தப்படும்.
மேலும், மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் டிஜிட்டல் லாக்கர்கள் வழங்கப்படும். இந்த டிஜிட்டல் லாக்கர்களில் முக்கியமான ஆவணங்கள், உடல்நலம் குறித்த தகவல்கள், தனிப்பட்ட விவரங்கள், சான்றிதழ்கள் போன்றவற்றை டிஜிட்டல் முறையில சேமித்து பாதுகாப்பாக வைக்க முடியும். தேவைப்படும் போது எப்போது வேண்டுமானாலும் கடவுச்சொல் மூலம் பதிவிறக்கம் செய்ய முடியும்
அதிகபட்ச தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மக்களுக்கு சிறந்த நிர்வாகத்தையும், தரமான சேவையையும் அளிக்க வேண்டும் என்பதை நோக்கமாகும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.