நோ பைக்... ஒன்லி லேடீஸ் வண்டிதான்... ஷோரூம் திறப்பதற்காக திருடிய மாமனிதன்..!

By vinoth kumarFirst Published Feb 3, 2019, 1:08 PM IST
Highlights

கியர் வண்டி ஓட்டத் தெரியாததால் பெண்கள் ஓட்டும் ஸ்கூட்டி வாகனங்களை மட்டும் திருடி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கியர் வண்டி ஓட்டத் தெரியாததால் பெண்கள் ஓட்டும் ஸ்கூட்டி வாகனங்களை மட்டும் திருடி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த நான்கு ஸ்கூட்டி பெப் வாகனங்கள் அடுத்தடுத்து திருடு போயின. இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குற்றவாளியை பிடிக்க தனி்ப்படை அமைக்கப்பட்டது. 

ஏற்கனவே இதுபோன்று குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் பட்டியலை போலீசார் தயார் செய்தனர். இதில் சிட்லப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் கியர் இல்லாத வாகனங்களான ஸ்கூட்டி, டிவிஎஸ் எக்ஸ்எல் போன்ற வாகனங்களை குறி வைத்து திருடுவதை வழக்கமாக கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். 

பெரிய வண்டிகளின் பூட்டை உடைப்பது கடினம் என்பதால் இந்த வழியை அவர் தேர்ந்தெடுத்திருப்பது வழக்கம் என்பதால் ஹரிஹரனைப் பற்றி தீவிர விசாரணை நடத்தினர். அவனை செல்போன் மூலம் மயிலாப்பூரில் வைத்து அவனை கைது செய்தனர். பின்னர் அவனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார். 

சென்னை தேனாம்பேட்டை நல்லான் தெருவைச் சேர்ந்த ஹரிகரன் (வயது 54). ரயில்வே கேன்டீனில் வேலைபார்த்து வந்துள்ளான். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருட்டு தொழில் செய்து வருகிறார். ஏன் ஸ்கூட்டி வாகனங்களை மட்டுமே திருடுகிறாய்?' என போலீஸார் கேட்டபோது, ''நமக்கு கியர் வண்டி ஓட்ட வராதுங்க. அதற்காக தொழிலில் இறங்கிய பிறகு சும்மா இருக்க முடியுமா? ஸ்கூட்டி பெப் வண்டி நமக்கு நல்லா ஓட்ட வரும். அதனால் அதை மட்டுமே குறிவைத்துத் திருடினேன் என்று ஹரிஹரன் கூறியுள்ளார்.

மேலும் திருடும் ஸ்கூட்டிகளை வீட்டில் கொண்டு போய் நிறுத்தினால் சந்தேகம் வரும் என்பதால் ரயில் நிலைய இருசக்கரவாகன பார்க்கிங்கில் போட்டு விடுவான். பின்னர் அந்த வாகனத்துக்கு போலி ஆர்சிபுத்தகம் தயார் 2 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 10 ஆயிரம் வரை விற்றுவிடுவான். அவனிடமிருந்து 20 ஸ்கூட்டி பெப் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

வாகனங்கள் அனைத்தையும் சென்னை, சைதாப்பேட்டை, குரோம்பேட்டை முதல் எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையம் வரை அங்குள்ள டூ வீலர் பார்க்கிங்கில் நிறுத்தி வைத்துள்ளான். கிட்டத்தட்ட ரயில் நிலைய பார்க்கிங்கை தனது திருட்டு வாகனங்களை நிறுத்தி வைக்கும் ஷோரூமாக ஹரிகரன் பயன்படுத்தி வந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!