சென்னை – பெங்களூரு செல்லும் பேருந்துகள் இன்றிரவு 8 மணி முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நாளை பந்த் நடைபெறுகிறது. கன்னட அமைப்புகள் பந்த் எதிரொலியாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் இன்றிரவு 8 மணி முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே காவிரி நதி நீர் தொடர்பாக பிரச்சினை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. தமிழகத்துக்கு தண்ணீரை திறந்து விட முடியாது எனவும், குறைவான நீரையே திறந்து விடுவோம் எனவும் கர்நாடகம் விடாப்படியாக உள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.
இதனிடையே, காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழகத்துக்கு கூடுதலாக 15 நாட்களுக்கு 5,000 கனஅடி நீரை தொடர்ந்து திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. மேலும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவின் அடுத்த கூட்டத்தில் (செப்டம்பர் 26ஆம் தேதி - நாளை) தமிழகத்துடனான நதிநீர் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கப்படும் என கர்நாடக அமைச்சரவை தெரிவித்துள்ளது.
நீட் ஜீரோ பெர்சண்டைல்: மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக நீர் பாதுகாப்பு குழு, சாந்தகுமார் குருபுரு தலைமையில் பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பந்திற்கு 92 அமைப்புகள், பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. நாளை காலை 11 மணிக்கு டவுன்ஹாலில் இருந்து மைசூர் வங்கி வட்டம் வரை மாபெரும் கண்டன ஊர்வலம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, காவேரி நீர் கட்டுப்பாட்டுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், பெங்களூருவில் கன்னட அமைப்புகள் நாளை முழு அடைப்பு நடத்துவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் இன்றிரவு 8 மணி முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு மேல் சூழலுக்கு ஏற்ப சென்னை, பெங்களுருவில் இருந்து பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.