
ஈரோடு
ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு குடும்பத்துடன் தொழிலதிபர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தபோது அருகில் இருந்த காவலாளர்கள் தடுத்து நிறுத்தி அவர்களை மீட்டனர். தனது சொத்தை பறிக்க சிலர் சதி செய்வதாக காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்தார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பொன்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் வேலுச்சாமி (47). இவர் தனது குடும்பத்துடன் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு உள்ள ஊராட்சி அலுவலகத்திற்கு நேற்று காரில் வந்தார்.
பின்னர் அவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி காரில் வைத்திருந்த மண்ணெண்ணை கேனை எடுத்து தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
பின்னர், வேலுச்சாமியிடம், உங்களது பிரச்சனை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு நகர காவல் ஆய்வாளர் சிவக்குமார் கூறினார்.
அதனைத் தொடர்ந்து வேலுச்சாமி தனது குடும்பத்துடன் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமாரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், “எனது தந்தைக்கு சொந்தமான 70 சென்ட் நிலத்தில் பெட்ரோல் பங்க் வைத்திருந்தேன். மேலும், அங்கு விவசாயமும் செய்து வந்தேன். குடும்பம் மற்றும் வியாபார செலவுக்காக புஞ்சைபுளியம்பட்டி மற்றும் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த இடைத்தரகர்கள் மூலம் திருப்பூரைச் சேர்ந்த ஒருவரிடம் எனது சொத்தை அடமானம் வைத்து ரூ.50 இலட்சம் கடன் பெற்றேன்.
இந்தத் தொகைக்கு உரிய வட்டியை நான் தவறாமல் செலுத்தி வருகிறேன். தற்போது அசலை முழுமையாக கொடுக்க தயாராக உள்ளேன். ஆனால், கடன் கொடுத்த திருப்பூரை சேர்ந்தவர் எனது நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுபற்றி அவரிடம் கேட்டால் என்னை மிரட்டுகிறார்.
மேலும், எனது நிலத்துக்குள் நுழையவும் அவர் தடை விதித்து வருகிறார். தற்போது அந்த நிலத்தின் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும். இதுபற்றி புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, திருப்பூரைச் சேர்ந்த அந்த நபரிடம் இருந்து எனது நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இதனைப் பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.