வீட்டில் பண்டல் பண்டலாக பதுக்கி வைக்கப்பட்ட புகையிலை பொருட்கள்; உரிமையாளருக்கு வலைவீச்சு...

First Published Jun 28, 2018, 10:59 AM IST
Highlights
banned Tobacco products hoarded in house searching for house owner...


திண்டுக்கல் 

திண்டுக்கல்லில் வீட்டில் பண்டல் பண்டலாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தலைமறைவான வீட்டின் உரிமையாளரை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் நடராஜன் தலைமையில் அதிகாரிகள் செல்வம், சாந்தி ஆகியோர் காவல் பாதுகாப்புடன் அந்த வீட்டிற்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, அந்த வீட்டில் பண்டல் பண்டலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை இருப்பதை கண்டு வந்த தகவல் உண்மைதான் என்று உறுதிபடுத்தி கொண்டனர். 

மொத்தம் 28 பண்டல்களில் சுமார் 3 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதில் இருந்தன. இதன் மதிப்பு ரூ.25 இலட்சமாம். 

பின்னர் புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவற்றின் மாதிரியை சேகரித்து ஆய்வுக்காக அனுப்ப உள்ளனராம். 

பின்னர் தெற்கு காவலாளார்கள் நடத்திய விசாரணையில் வீட்டின் உரிமையாளர் முத்துரத்தினவேல் (30) என்பதும், அவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. 

அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்துவதை அறிந்த அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடித்த பின்னர்தான், புகையிலை பொருட்களை எங்கிருந்து வாங்கினார்? இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? போன்ற தகவல்கள் தெரியவரும் என்று காவலாளர்கள் தெரிவித்தனர். 
 

click me!