வங்கி அதிகாரிகள் – ஊழியர்கள் போராட்டத்தால் ஈரோட்டில் மட்டும் ரூ.400 கோடி வர்த்தகம் பாதிப்பாம்…

First Published Aug 23, 2017, 6:32 AM IST
Highlights
Bank officials - employees strike in Erode Rs 400 crore will be affected


ஈரோடு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தால் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ரூ.400 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 22–ஆம் தேதி (நேற்று) நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வங்கி அதிகாரிகள், ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று நடைப்பெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும் இல்லாமல் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டது. பெரும்பாலான வங்கிகள் திறக்கப்படாமல் பூட்டுப் போடப்பட்டு இருந்தது.

ஒப்பந்த முறை ஊழியர்கள் பணியாற்றும் ஒரு சில தனியார் வங்கிகள் மட்டுமே செயல்பட்டன. அங்கும் குறைவான ஊழியர்களே இருந்ததால் பண பரிவர்த்தனை போன்ற பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு தலைமை பாரத வங்கி வளாகத்தில் நேற்று காலை போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கணேஷ் தலைமை வகித்தார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜோ சுகுமார், வங்கி அதிகாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போராட்டத்தில், “பொதுத்துறை வங்கிகள் வலிமையாக்கப்பட வேண்டும்.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும்.

வங்கிகள் இணைப்பு திட்டங்களை கைவிட வேண்டும்.

வங்கிக் கடனை திருப்பி கட்ட மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இந்தப் போராட்டம் குறித்து வங்கிக் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கணேஷ், “ஈரோடு மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட, தனியார் வணிக வங்கிகளில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இதில் 310 வங்கிகளில் பணியாற்றும் 430 பெண்கள் உள்பட 2100 பேர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் வங்கிகளில் பண பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை என சுமார் ரூ.400 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது

ஐசிஐசிஐ, ஆக்சிஸ் போன்ற ஒரு சில தனியார் வங்கிகளில் ஒப்பந்தம் முறையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் மட்டுமே வேலைக்கு சென்றனர்.

போராட்டத்தின் காரணமாக பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டுவிட்டன. ஏ.டி.எம். மையங்கள் உள்ள ஒரு சில வங்கிகள் திறக்கப்பட்டு இருந்தது. அங்கும் ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் வங்கி பணிகள் முழுமையாக முடங்கியது” என்று தெரிவித்தார்.

tags
click me!