
மாணவர்கள் மீண்டும் மெரீனாவில் கூடப்போகிறார்களா? பதட்டம்… போலீஸ் குவிப்பு..
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து தமிழகம் எங்கும் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.
சென்னை மெரினா கடற்கரையில் தன்னெழுச்சியாக திரண்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய போராட்டம் மத்திய ,மாநில அரசுகளை அசைத்துப் பார்த்தது. இதனால் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
ஆனால் சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய அறவழி போராட்டம் கலவரத்தில் முடிந்தது.
இந்த மாபெரும் வெற்றிக்கு மெரினா கடற்கரை மிக முக்கிய காரணமாக இருந்தது. மாணவர்களும், இளைஞர்களும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடத்த மெரினாவையே தேர்ந்தெடுப்போம் என அறிவித்திருந்தனர்.
இதனிடையே, இனி மெரீனாவில் போராட்டம் நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர். கடற்கரையில் 4 பேருக்கு மேல் கூடவோ, போராட்டம் நடத்தவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டள்ளது.
இந்நிலையில் மீண்டும் மாணவர்கள் மெரீனாவில் கூடி போராட்டம் நடத்தப் போவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து பதற்றமடைந்த காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நேற்று பிற்பகல் முதலே மெரினாவில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 10 அடிக்கு ஒரு காவலர் வீதம் மெரினாவில் நிற்கவைக்கப்பட்டுள்ளனர்.
போலீசாரின் இந்த பாதுகாப்பு நடவடிக்கை, மெரினாவில் நடைபயிற்சிக்கு வருபவர்களுக்கும், குடும்பத்தினருடன் பொழுது போக்க வருபவர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.