காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை மெரினாவில் போராட்டம் நடத்த ஐயாக்கண்ணு திட்டம் - 

First Published Apr 14, 2018, 6:59 AM IST
Highlights
ayyakannu plan to conduct a fight in Marina till Cauvery management board is set up -


அரியலூர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை மெரினாவில் போராட்டம் நடத்து உள்ளோம் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் தலைவர் ஐயாக்கண்ணு தெரிவித்தார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் தலைவர் ஐயாக்கண்ணு தமிழகம் முழுவதும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளால் ஏற்படும்  தீமைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லும் விதமாக கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கி உள்ளார். 

இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று அரியலூர் வந்தடைந்தது. அரியலூர் மாவட்டம், கீழகாவட்டாங்குறிச்சியில் தொடங்கிய இந்தப் பிரச்சாரம் கரைவெட்டி, சன்னாவூர், குலமாணிக்கம், திருமழபாடி, அன்னிமங்கலம் வழியாக சென்று திருமானூரில் நிறைவடைந்தது. 

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஐயாக்கண்ணு தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம், "தமிழகத்தில் உள்ள விவசாயிகளை விரட்டிவிட்டு கார்பரேட் நிறுவனங்கள் கொண்டுவரும் மரபணு செய்யப்பட்ட விதைகளை சாகுபடி செய்து மத்திய அரசு லாபம் பார்க்க நினைக்கிறது. 

இதனால் வருங்கால இளைஞர்கள் ஆண்மை இழக்க நேரிடும். அதேபோன்று பெண்கள் கருத்தரிக்கும் சக்தியை இழப்பார்கள். தமிழக விவசாயிகள் எதிர்க்கும் இந்த திட்டத்தை பிரதமர் வளர்க்க முனைப்பாக உள்ளார்.

மேலும், தமிழகத்தில் பெட்ரோல், டீசல், ஐட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்டப் பொருட்கள் கிடைப்பதால், இதனை எடுத்தால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10 இலட்சம் கோடி வருமானம் கிடைக்கும் என்பதால் மத்திய அரசு இங்கு அத்திட்டங்களை செயல்படுத்துகிறது.

பூமியிலிருந்து தண்ணீரை நாம் எப்படி பிரித்து எடுக்கிறோமோ அதுபோல மழை காலங்களில் வீணாக செல்லும் தண்ணீரை பூமிக்குள் கொண்டுச் செல்லும் முறையை அரசு நடைமுறைபடுத்த வேண்டும். 

வரும் கோடைக் காலங்களில் ஏரி,குளங்கள், வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை மெரினாவில் போராட்டம் நடத்த உள்ளோம். 

பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் விவசாயிகளே நாட்டின் முதுகெலும்பு என பேசுவார். பின்னர் விவசாயிகளை மறந்து விடுவார். அவர்ம, விவசாயிகளை கேவலமாக பார்க்கிறார்" என்று அவர் கூறினார். 

click me!