
விழுப்புரம்,
விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ பந்தயம் நடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், சிலரை தேடும் பணி தீவிரம்.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலையில் வெள்ளிக்கிழமை காலை சிலர் ஆட்டோ பந்தயம் நடத்துவதாக விழுப்புரம் தாலுகா காவலாளார்களுக்கு தகவல் வந்தது.
அந்த தகவலின்பேரில் காவல் சப்–இன்ஸ்பெக்டர்கள் மருது, சத்தியசீலன் ஆகியோர் தலைமையிலான காவலாளார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றனர். அங்கு 3 ஆட்டோக்களை வைத்துக்கொண்டு சிலர் ஆட்டோ பந்தயம் நடத்திக் கொண்டிருந்ததும் இதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் தெரிந்தது.
உடனே ஆட்டோ பந்தயம் நடத்திய கும்பலை காவலாளார்கள் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். பிடிபட்ட 8 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் காவலாளார்கள் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர்கள் காஞ்சீபுரம் மாவட்டம் பொத்தேரி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ராஜா (27), மகேஷ் (28), பாலாஜி (26), செங்கல்பட்டு கார்நிலம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி (24), சென்னை மாதவரம் மோகன் (38), காஞ்சீபுரம் செந்தமிழ்நகரை சேர்ந்த ஜானகிராமன் (54), மறைமலைநகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (30), பெரமனூரை சேர்ந்த ராஜேஷ் (24) என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலையில் இருந்து பிடாகம் வரை ஆட்டோ பந்தயம் நடத்தியதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ராஜா உள்பட 8 பேர் மீதும் அனுமதியின்றி ஆட்டோ பந்தயம் நடத்துதல், விபத்து ஏற்படும் பகுதி என தெரிந்தும் அலட்சியமாக பந்தயம் நடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், அவர்கள் 8 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து பந்தயத்திற்கு பயன்படுத்தப்பட்ட 3 ஆட்டோக்களை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த பந்தயம் நடத்தியது தொடர்பாக விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த சிலரை காவலாளர்கள் தேடும் பணியில் ஈடுப்பட்டு உள்ளனர்.