எகிறி அடிக்கும் ஆட்டோ, கால் டாக்சி கட்டணம்….. பெட்ரோல் விலையால் கடும் உயர்வு…

First Published Apr 14, 2018, 5:36 PM IST
Highlights
auto and call taxi chareges hike in chennai


பெட்ரோல், டீசல் மற்றும் ஆயில் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருவதால் சென்னையில் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி கட்டணங்களும் கடுமையாக உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த மாதம் 1 லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய் 25 பைசா என இருந்தது. இந்த மாதம் 76 ரூபாய் 63 பைசாவாக விலை உயர்ந்தது. இந்த நிலையில் இன்று 2 பைசா அதிகரித்து 1 லிட்டர் பெட்ரோல் ரூ.76.65-க்கு விற்கப்படுகிறது.

டீசல் 1 லிட்டர் 68 ரூபாய் 48 பைசாவில் இருந்து 6 பைசா அதிகரித்து இன்று ரூ.68.54-க்கு விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் ஆட்டோ கால்டாக்சி கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.



சென்னையில் ஓடும் 75 ஆயிரம் ஆட்டோக்களுக்கு தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கட்டணம் நிர்ணயித்தது. அதன்படி குறைந்தபட்ச கட்டணமாக ரூ.25-ம், கூடுதலாக கி.மீட்டருக்கு ரூ.12 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் ஜி.பி.ஸ். தொழில் நுட்ப வசதியுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை.



இதனால் ஆட்டோ கட்டணத்தை டிரைவர்களே முடிவு செய்து குத்து மதிப்பாக ஒரு தொகையை கேட்கிறார்கள். பொதுமக்கள் பேரம் பேசிதான் ஆட்டோக்களில் பயணம் செய்ய வேண்டி உள்ளது. 60 ரூபாய்க்கு குறைந்து ஆட்டோ டிரைவர்கள் வருவதில்லை.

இதேபோல் கால் டாக்சி கட்டணமும் கிலோ மீட்டருக்கு 14 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கிறார்கள். ஓலா டாக்சியில் நேரத்துக்கு தக்கபடி கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. சில சமயம் அதிக கட்டணம் வருகிறது. சில நேரம் குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.



இதனை போக்குவரத்து கழக அதிகாரிகள் கண்காணிப்பதும் கிடையாது. ஆட்டோக்களில் மீட்டர் காட்சி பொருளாகவே உள்ளது. எனவே அரசு இதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே பேருந்து கட்டணமும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தற்போது பயணம் என்பதே மிகுந்த சுமையாகிவிட்டது.

click me!