
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீதான பதவி நீக்கத் தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் உட்பட 56 முன்னாள் நீதிபதிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு, தங்களது வலுவான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் தொடர்பான வழக்கில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த தீர்ப்பை ஒட்டி, எதிர்க்கட்சிகள் அவர் மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவர முயல்வது "நீதித்துறையின் சுதந்திரத்திற்கு வேட்டு வைக்கும் முயற்சி" என்று முன்னாள் நீதிபதிகள் சாடியுள்ளனர்.
56 முன்னாள் நீதிபதிகளும், எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கைக்கு "கடும் ஆட்சேபனை" தெரிவித்தனர். இந்தத் தீர்மானம், "சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் சித்தாந்த மற்றும் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இணங்காத நீதிபதிகளை அச்சுறுத்தும் ஒரு அப்பட்டமான முயற்சி" என்று அவர்கள் வர்ணித்துள்ளனர்.
இந்த முயற்சி தொடர அனுமதிக்கப்பட்டால், "அது நமது ஜனநாயகத்தின் வேர்களையும், நீதித்துறையின் சுதந்திரத்தையும் அடியோடு சாய்த்துவிடும்" என்றும் அந்த அறிக்கையில் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த அறிக்கையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் 1975-ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி காலத்தை (Emergency) நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) காங்கிரஸ் கட்சியைக் குற்றஞ்சாட்ட அடிக்கடி பயன்படுத்தும் ஒரு விவகாரம் இது.
"நெருக்கடி நிலையின் இருண்ட காலகட்டத்தில் கூட, அப்போதைய அரசாங்கம், தங்களுக்கு இணங்க மறுத்த நீதிபதிகளைத் தண்டிப்பதற்காக, பதவி நீக்கம் உட்பட பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தியது," என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசியலமைப்பை திருத்துவதற்கான நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்திய 1973-ஆம் ஆண்டின் கேசவானந்த பாரதி வழக்கு உள்ளிட்ட குறிப்பிடத்தக்க தீர்ப்புகளையும் அவர்கள் குறிப்பிட்டனர்.
"அரசியல் தலையீடு எவ்வாறு நீதித்துறை சுதந்திரத்தை சேதப்படுத்தும் என்பதை இவை நினைவூடும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய். சந்திரசூட் மற்றும் தற்போதைய நீதிபதி சூர்யா காந்த் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு, சில அரசியல் நலன்களுக்கு மாறாக முடிவுகளை எடுக்கும்போது, நீதிபதிகளை அவதூறு செய்ய முயற்சிப்பதாகவும் முன்னாள் நீதிபதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
"பதவி நீக்கத்திற்கான நோக்கம் நீதித்துறையின் நேர்மையைப் பாதுகாப்பதே தவிர, அதை ஒரு அச்சுறுத்தும் கருவியாக, எச்சரிக்கை செய்யும், பழிவாங்கும் சாதனமாக மாற்றுவது அல்ல. நீதிபதிகளை அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க செயல்படுமாறு கட்டாயப்படுத்த, பதவி நீக்க அச்சுறுத்தலைப் பயன்படுத்துவது, அரசியலமைப்பு அளித்துள்ள பாதுகாப்பை மிரட்டல் கருவியாக மாற்றுவதாகும். இத்தகைய அணுகுமுறை ஜனநாயக விரோதமானது, அரசியலமைப்புக்கு எதிரானது," என்று முன்னாள் நீதிபதிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் உட்பட 100-க்கும் மேற்பட்ட இந்தியா கூட்டணி (INDIA bloc) நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தத் தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பித்தனர்.
இந்தத் தீர்மானத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையான கண்டனம் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் தங்கள் வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டினார். "ஒரு தீர்ப்பிற்காக ஒரு நீதிபதி பதவி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்வது சுதந்திரத்திற்குப் பிறகு இதுவே முதல்முறை. தங்கள் வாக்கு வங்கியை திருப்திப்படுத்த அவர்கள் இதைக் கொண்டு வந்துள்ளனர்," என்றும் அவர் கூறினார்.