
தேனி மாவட்டம் போடி, சந்தைப்பேட்டைத் தெருவைச் சேர்ந்தவர் மாலதி (48) இவர் போடி திருமலாபுரம் நாடார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை ஆசிரியை மாலதி, பள்ளிக்கு செல்ல ஆயத்தமானார். அப்போது திடீரென அவரது வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்களிடம் யார் என்ன என்ற கேள்வி எழுப்புவதற்குள்ளாகவே, அந்த மர்ம நபர்கள், ஆசிரியை மாலதியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் ஆசிரியை மாலதிக்கு பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதன் பின்னர், மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர். ஆசிரியரின் சத்தம் கேட்டு அங்கு வந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்தோர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், போடி நகர போலீசாருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தனர். இதன் பின்னர் சம்பவ இடத்துக்கு மோப்ப நாயுடன் வந்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாலதிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.