புதுவருடம் பிறந்ததால் ஏ.டி.எம் அட்டையைப் புதுப்பிக்கனும் என்று போன் வரும் நம்பிடாதீங்க; புதுவகை பணமோசடி குரூப் கிளம்பி இருக்கு…

First Published Jan 3, 2017, 10:50 AM IST
Highlights


புதுவருடம் பிறந்ததால் ஏ.டி.எம் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என்று கூறி ரூ.28 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர், பூ வியாபாரியை ஏமாற்றியுள்ளார்.

திருவைகுண்டம் கருணாநிதி நகரைச் சேர்ந்த பூ வியாபாரி கோபால். நேற்று கோபாலின் செல்லிடப்பேசியை தொடர்பு கொண்ட மர்ம நபர், “தான் கனரா வங்கியிலிருந்து பேசுகிறேன். புது வருடத்தில் ஏடிஎம் இரகசிய எண்ணை புதுப்பிக்க வேண்டும் எனவும் உங்களது இரகசிய எண்ணை தெரிவிக்கும்படியும் கூறியுள்ளார். 

இதை நம்பிய கோபால் ஏடிஎம் அட்டையின் இரகசிய எண்ணை தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, மீண்டும் கோபாலை தொடர்பு கொண்ட அதே மர்ம நபர் உங்களுக்கு வேறு வங்கியில் சேமிப்பு கணக்கு இருந்தாலும் ஏடிஎம் எண்ணைத் தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.

இதில் சந்தேகம் அடைந்த கோபால் தான் வங்கியில் நேரடியாக தெரிவிக்கிறேன் என கூறவும் செல்லிடப்பேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து கோபால் உடனடியாக கனரா வங்கியின் திருவைகுண்டம் கிளைக்குச் சென்று விசாரித்த போது, அவரது வங்கிக் கணக்கிலிருந்து மும்பை மற்றும் மைசூரில் உள்ள இரண்டு வெவ்வேறு கணக்கிற்கு ரூ.28 ஆயிரம் மாற்றம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து திருவைகுண்டம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். ஆய்வாளர் வெங்கடேசன் அந்த புகாரைப் பெற்றுக் கொண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

click me!