
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் திடீரென இரயில் மறியலிலும் ஈடுபட்டதால் காவல்துறையினர் சமாளிக்க முடியாமல் திணறினர்.
தஞ்சை இரயில் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு மாணவர்கள் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் சிலர் அருகில் உள்ள இரயில் நிலையத்திற்குள் புகுந்து சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற சோழன் விரைவு இரயிலையும், நெல்லையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பயணிகள் இரயிலையும் மறித்த சல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.
500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுமார் ஒரு மணி நேரம் மாணவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த தஞ்சை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையிலான காவலாளர்கள் மாணவர்களை சமாதானம் செய்து தண்டவாளத்தை விட்டு வெளியே அழைத்து வந்தனர். அதன் பின்னர் இரயில்கள் புறப்பட்டன.
இதேபோன்று, பூதலூர் அருகே உள்ள புதுப்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் சல்லிக்கட்டுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் அமர்ந்து தொடர்ந்து மாலை வரை முழக்கம் எழுப்பினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு, சல்லிக்கட்டு ஆதரவு அமைப்புக்கள் சார்பில் உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டன.