
தருமபுரி
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.எம்.நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஏ.சேகர், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் சி.காவேரி, மாநிலத் துணைத் தலைவர் அண்ணா குபேரன், மாவட்டப் பொருளாளர் கே.ராஜா உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "சிறப்புக் காலமுறை ஊதியத்தை மாற்றி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
குடும்ப ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும்.
ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடையாக அமைப்பாளர்களுக்கு ரூ.5 இலட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.2 இலட்சமும் வழங்க வேண்டும்.
உணவூட்டு செலவினத்தை ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
பெண் சத்துணவு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பாக 9 மாத காலம் அளிக்க அரசாணை வழங்க வேண்டும்" போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.