
சபாநாயகர் தனபால் உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் இன்றைய சட்டப் பேரவை, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப் பேரவை கடந்த மாதம் 17 ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. காரசாரமாக நடைபெற்று வரும் இந்த கூட்டத் தொடரில் பல முக்கியமான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதிமுக எம்எல்ஏக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக ஆங்கில சேனலில் ஒளிபரப்பான செய்தி, குட்கா விவகாரம் உள்ளிட்ட பல பிரச்சனைகளில் கடும் அமளி ஏற்பட்டு திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த அமளிகளுக்கிடையே சபாநாயகர் தனபால் சட்டப் பேரவையை நடத்தி வந்தார்.
இந்நிலையில் லோ பிளட் பிரஷர் காரணமாக சபாநாயகர் தனபால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்குச் சென்று நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்..
தனபால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் தமிழக சட்டப் பேரவை நடைபெற்று வருகிறது.
இன்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மானியக் கோரிக்கைக்கு பதிலளித்து , முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.