குடிநீர் கேட்டு 50 அடி உயர நீர்தேக்க தொட்டி மீது ஏறி மூவர் தற்கொலை மிரட்டல்...

First Published Mar 6, 2018, 8:54 AM IST
Highlights
asking water supply three persons give suicides threaten in a 50 feet water tank


நாமக்கல்

நாமக்கல்லில் குடிநீர் கேட்டு 50 அடி உயர மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது ஏறி நின்று மூன்று பேர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ளது எல்லிபாளையம் கிராமம். இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 

இந்தப் பகுதிகளுக்கு கடந்த 10 நாள்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக் கப்பட்ட இப்பகுதி மக்கள் பலமுறை சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த இந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் வெற்றுக் குடங்களுடன் திரண்டு வந்து சில நாள்களுக்கு முன்பு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு குடிநீர் கேட்டனர். பின்னர், வட்டார (ஊராட்சி)வளர்ச்சி அலுவலர் சிவபிரகாசம், அந்த பெண்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

வட்டார (ஊராட்சி)வளர்ச்சி அலுவலரின் பேச்சை நம்பி குடிநீர் விநியோகிக்கப்படும் என்று கடந்த சில நாள்களாக மக்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்து ஏமாற்றம் அடைந்தது தான் மிச்சம். 

இதனைத் தொடர்ந்து அந்த ஊரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் நடராஜன், எலட்ரீசியன் பாலு, பிளஸ்-1 மாணவன் தமிழரசன் ஆகிய மூவரும் நேற்று காலை 9 மணியளவில் செல்லிபாளையத்தில் உள்ள சுமார் 50 அடி உயரம் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மேல் ஏறி நின்று அங்கிருந்து கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பகுதியினர் சேந்தமங்கலம் காவலாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து சேந்த மங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் அங்கு விரைந்து சென்று குடிநீர் மேல்நிலை தொட்டி மீது நின்ற மூன்று பேரையும் கீழே இறங்க வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் மண்டல அலுவலர் செந்தில், சேந்தமங் கலம் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் முனியப்பன், காவல் ஆய்வாளர் பொன்.செல்வராஜ் ஆகியோர் கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சியில் குடிநீர் ஆபரேட்டரை மாற்றி புதிய தாக ஒருவரை நியமித்து தொடர்ந்து குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். 

இதனையடுத்து குடிநீர் தொட்டி மேல் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த மூவரும் கீழே இறங்கிவந்தனர்.  
 

click me!