
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் செயற்கையாக கார்பைட் கல் மூலம் பழுக்கவைத்த 500 கிலோ மாம்பழங்களை அதிரடியாக பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அவற்றை அழித்தனர்.
தமிழகத்தில் தற்போது மாம்பழம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை நகரில் பெரும்பாலான கடைகளில் கார்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது என்ற புகார்கள் எழுந்துள்ளன.
இதனையடுத்து ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின்பேரில், திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கலைஷ்குமார், சுப்பிரமணி மற்றும் அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.
திருவண்ணாமலை மாடவீதி, தேரடி வீதி, ஆணைக்கட்டு தெரு, ஒத்தவாடத் தெரு உள்ளிட்ட பகுதியில் உள்ள பழ மண்டிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில்,, "கார்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் மற்றும் 200 கிலோ அழுகிய மாம்பழங்கள்" பறிமுதல் செய்யப்பட்டு அவை முற்றிலும் அழிக்கப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார், "திருவண்ணாமலையில் கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்பேரில் இந்த ஆய்வு நடைபெற்றது.
கார்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் சாப்பிட்டால் வாந்தி, வயிற்று பிரச்சனை போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதுபோன்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உணவு பாதுகாப்புத்தர சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் எச்சரித்தார்.