போலி மருத்துவர்கள் என்று ஹோமியோபதி மருத்துவர்களை கைது செய்வது சட்ட விரோத செயல் – ஆயுஷ் தலைவர் கண்டனம்…

First Published Nov 6, 2017, 8:11 AM IST
Highlights
arresting Homeopathic doctors as duplicate doctors is condemned


சிவகங்கை

போலி மருத்துவர் என்று ஹோமியோபதி மருத்துவர்களை கைது செய்வது சட்டவிரோத செயல் என்று ஆயுஷ் மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தமிழ்செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி மருத்துவர்களின் கூட்டமைப்பு (ஆயுஷ்) சங்க மாநிலத் தலைவர் செந்தமிழ்செல்வன் நேற்று சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூருக்கு வந்தார்.

அவர் போலி மருத்துவர் என கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஹோமியோபதி மருத்துவர் பாண்டீஸ்வரியின் வீட்டிற்கு நிர்வாகிகளுடன் சென்று, கைது மற்றும் காவலாளர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், “தமிழகத்தில் 18000 சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஹோமியோபதி மருத்துவர்கள் உள்ளனர்.

மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதற்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்து இல்லை. ஹோமியோபதி, சித்தா, யுனானி, ஆயுர்வேதத்தில் மருந்து உண்டு.

டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்தப்படி நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் போலி மருத்துவர்கள் என கைது செய்யப்பட்டுள்ளனர். இது முழுக்க, முழுக்க சட்டவிரோத செயலாகும். முறையாக மருத்துவம் படித்து சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் மீது கைது நடவடிக்கை எடுப்பது தவறானது.

இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை ஹோமியோபதி மருத்துவர்கள் மூன்று பேர் போலி மருத்துவர் என்ற பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, போலி மருத்துவர் என்ற பெயரில் ஹோமியோபதி மருத்துவர்களை கைது செய்யக் கூடாது” என்று அவர் தெரிவித்தார்.

click me!