MK Stalin's Coimbatore visit :ஹெலிகாப்டர் விபத்து - குன்னூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

By Thanalakshmi VFirst Published Dec 8, 2021, 3:23 PM IST
Highlights

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடந்து பகுதிகளை பார்வையிட இன்று மாலை 5 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். மேலும் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை உயரதிகாரிகளுடன் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில்  ராணுவ ஹெலிகாப்டர் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.மும்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் இந்த விமானத்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது. கீழே விழுந்ததில் ஹெலிகாப்டர் நொறுங்கி தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த 2 ராணுவ அதிகாரிகள் வெலிங்கடன் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


உடனடியாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. ராணுவம் தரப்பிலிருந்து விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரிய தொழில்நுட்ப வசதிகளைக்கொண்டதாகவும் ரஷ்யாவின் கசன் நிறுவன தயாரிப்பான எம்.ஐ - 17வி5 என்ற ராணுவ ஹெலிகாப்டரில் இவர்கள் பயணம் செய்துள்ளனர். தலைமை ஜெனரல் பயணம் செய்ததால் மிகுந்த சோதனை மற்றும் பாதுகாப்புப் பிறகே ஹெலிகாப்டர் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சரியா 11.47 மணிக்கு கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டிருக்கிறது.

இந்த விபத்தானது மதியம் 12.20 மணிக்கு, அதாவது வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு 10 கி.மீ தொலைவில் நிகழ்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரத்திற்கு விடாமல் தீப்பற்றி எரிந்தாகவும், மிகுந்த போராட்டத்திற்குப்பிறகே தீ அணைக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் ஹெலிகாப்டர் விபத்து நடத்த இடத்திற்கு, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு சென்றுள்ளார். மேலும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மருத்துவக்குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. விபத்து நடந்த இடம் முழுவதும் தற்போது இராணுவத்தினர் கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஆய்வு மற்றும் விசாரணை முன்னெடுக்கபட்டுள்ளது. நொறுக்கிய ஹெலிகாப்டர் பாகங்கள், கருப்புபெட்டி உள்ளிட்டவை தேடும் பணியில் இராணுவத்தினர் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் தமிழக காவல்துறையினரும் , இராணுவத்தினருடன் இணைந்து விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு , தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீட்பு பணிகளை பார்வையிட, இன்று மாலை 5 மணியளவில் செல்லவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் இந்த விபத்து தொடர்பாக மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறது. மேலும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கமளித்துக் கொண்டிருப்பதாகவும், அதைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங் குன்னூருக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

click me!