
திட்டமிட்டபடி ஜனவரி 8, 9 ஆகிய நாட்களில் எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றை கட்டுபடுத்தும் வகையில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், மாநிலம் முழுவதும் இன்று முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதேபோல், வரும் 9-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு நாளன்று, டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வு நடைபெறுமா என்ற குழப்பம் எழுந்தது. இதைத்தொடர்ந்து, திட்டமிட்டபடி ஜனவரி 8, 9 ஆகிய நாட்களில் எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழக அரசு ஊரடங்கு நாளன்று போட்டித் தேர்வுகளுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி என்ற தலைப்பில் வழிகாட்டுதல்களை அறிவித்ததை தொடர்ந்து, தேர்வாணையத்தினால் ஏற்கனவே 08.01.22 (சனிக்கிழமை) மற்றும் 09.01.22 மற்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படுவதாக இருந்த எழுத்துத் தேர்வுகள் எவ்வித மாற்றமும் இல்லாமல் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய கட்டிடகலை திட்ட உதவியாளர் தேர்வானது 08.01.22 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் எனவும் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகள் தேர்வானது 09.01.22 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரையும் நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையன்று யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுதச் செல்வோருக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது. தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு அல்லது அழைப்புக்கடிதத்தை காண்பித்து பயணங்களை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும், நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான பிரதான தேர்வுகள் நாளை தொடங்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.