தூத்துக்குடியில் விஏஓ லூர்து கொலை செய்யப்பட்டது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்து கிடப்பதை அரசு கண்டுகொள்ளாமல் தூக்கத்தில் இருப்பதாகச் சாடியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்தல் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், இன்று அவரது அலுவலகத்திற்கு வந்த இரண்டு பேர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளனர்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்வியை எழுப்பியுள்ள இந்தச் சம்பவம் பற்றி எதிர்க்கட்சியினர் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்ரில் விமர்சித்துள்ளார். "தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் சகோதரர் லூர்து பிரான்ஸிஸ் அவர்கள், அவரது அலுவலகத்திலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீரழிந்து இருக்கிறது என்பதைக் காட்டுகிறது" என அண்ணாமலை கூறுகிறார்.
மேலும், "கடந்த 13 ஆம் தேதி, தூத்துக்குடி முறப்பநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் மணல் கடத்தப்படுவதாக, ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட சில நபர்கள் மீது, முறப்பநாடு காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்திருக்கிறார். அந்த நபர் மீது கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருந்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், தன் பணியைச் சரியாகச் செய்த அரசு அதிகாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எந்தப் பாதுகாப்புமில்லாத சூழலே நிலவுகிறது." எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் சகோதரர் லூர்து பிரான்ஸிஸ் அவர்கள், அவரது அலுவலகத்திலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீரழிந்து இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. (1/4)
— K.Annamalai (@annamalai_k)"சமூக விரோதிகள் மேல் நடவடிக்கை எடுக்காமல், குற்றச் சம்பவங்களைப் பூசி மெழுகப் பார்க்கும் கையாலாகாத திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். இன்னும் எத்தனை உயிர்ப் பலிகள் வேண்டும் இந்த திறனற்ற திமுக அரசு தூக்கத்திலிருந்து கண் விழிக்க?" எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கிறார்.
விஏஓ கொலை செய்யப்பட்ட விவகாரம்... திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!
முன்னதாக, இந்தக் கொலைச் சம்பவம் மிகுந்த துயரம் அளிப்பதாகக் கூறி இருக்கும் முதல்வர் ஸ்டாலின், "தம் கடமையை முறையாக நிறைவேற்றி, அதன் காரணமாக உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்புணர்வையும், கடமை உணர்ச்சியையும் தமிழ்நாடு அரசு போற்றுகின்றது" எனத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருக்கும் முதல்வர், லூர்து குடும்பத்தினருக்கு அரசின் சார்பாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதியுதவி வழங்குவதாவும் அறிவித்துள்ளார்.