
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக சிறப்பாக செயல்பட்டார். தமிழகத்தில் எங்கே உள்ளது? என தேடும் நிலையில் இருந்த பாஜகவை, மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தவர் அண்ணாமலை என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அண்ணாமலைக்கு என்று கட்சியில் பெரும் ஆதரவாளர்கள் பட்டாளம் உள்ளது.
பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்பும் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அண்ணாமலை, தமிழக அரசு செய்யும் தவறுகளை உடனுக்குடன் சமூகவலைத்தளங்கள் வாயிலாக சுட்டிக்காட்டி வருகிறார். இந்த நிலையில், கோவாவில் நடைபெற்ற IRON MAN விளையாட்டுப் போட்டியில் அண்ணாமலையும் பங்கேற்று அசத்தினார். இந்த அளவில் நடைபெற்ற கோவா IRON MAN விளையாட்டுப் போட்டிகளில் சைக்கிளிங், நீச்சல், ரன்னிங் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன.
இதில் சைக்கிளிங், நீச்சல் மற்றும் ரன்னிங்கில் கலந்து கொண்ட அண்ணாமலை, சுமார் 1.9 கிமீ ஸ்விம்மிங் செய்துள்ளார். 90 கிமீ சைக்கிள் ஓட்டியுள்ளார். மேலும் அவர் 21 கிமீ ஓடப்பந்தயத்திலும் கலந்து கொண்டார். அண்ணாமலை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற வீடியோக்களையும், புகைப்படங்களையும் தமிழக பாஜக மாநில செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட பல்வேறு பாஜகவினர் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
புகழந்து தள்ளிய ஆதரவாளர்கள்
''அரசியல் மட்டுமல்ல; அனைத்து கலைகளும், திறமைகளும் எங்கள் அண்ணனுக்கு அத்துப்படி'' என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் புகழந்து தள்ளி வருகின்றனர். அதே வேளையில் திமுக உள்ளிட்ட கட்சிகள் அண்னாமலைக்கு எதிரான கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.