தோண்டிய பள்ளத்தை மூடாமல் திறந்து வைத்த காரணத்தால் 4 சிறுவர், சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். நான்கு இளம் உயிர்கள் பலியான இரண்டு சம்பவங்களிலும் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
குழியை மூடாததால் விபரீதம்
திருப்பத்தூர் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் தோண்டிய பள்ளத்தில் விழுந்து 4 சிறுவர்,சிறுமி உயிரிழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சாலைகள் அமைப்பதற்காக, சிக்கண்ண குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், 15 அடி ஆழமுள்ள குழி தோண்டி மண் எடுத்துள்ளனர்.
பாதுகாப்பற்ற முறையில், மூடாமல் வைக்கப்பட்டிருந்த இந்தக் குழியில் மழை நீர் தேங்கி, கடந்த 26 செப்டம்பர் 2023 அன்று, 10 மற்றும் 14 வயதுடைய இரண்டு பள்ளிச் சிறுமிகள் நீரில் மூழ்கி இறந்திருக்கின்றனர். அதே தினம், திருவள்ளூர் அருகே ஊத்துக்கோட்டையில், அரிசி ஆலை கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி, ஏழு வயது சிறுவனும், அவனது ஆறு வயது சகோதரியும் பலியாகியிருக்கின்றனர்.
அண்ணாமலை கண்டனம்
அரசுப் பள்ளி வளாகத்தில், 15 அடி ஆழத்திற்கு மணல் அள்ளுவதற்கு, ஒப்பந்ததாரர்களுக்கு, மாவட்ட நிர்வாகமும் பள்ளி நிர்வாகமும் எப்படி அனுமதி கொடுத்தார்கள்? குழிகளை மூடாமல் பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்தது மாவட்ட நிர்வாகத்தின் தோல்வி. நான்கு உயிர்கள் தமிழக அரசின் கவனக்குறைவால் பறிபோயிருக்கின்றன.
அரசுப் பள்ளி வளாகத்தில் மணல் எடுக்க அனுமதி கொடுத்த அதிகாரிகளும், ஒப்பந்ததாரரும் முதல் குற்றவாளிகள். நான்கு இளம் உயிர்கள் பலியான இரண்டு சம்பவங்களிலும் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழக அரசின் மெத்தனப்போக்குக்கு, பிஞ்சு உயிர்கள் பலியாவதா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படியுங்கள்
குன்னூர் சுற்றுலா பேருந்து விபத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு !!