நிர்பந்தத்தால் திமுகவிடம் சரணடைந்த கமல்ஹாசன்: அண்ணாமலை தாக்கு!

By Manikanda Prabu  |  First Published Mar 10, 2024, 12:46 PM IST

நிர்பந்தம் காரணமாக திமுகவுக்கு சென்று சரணடைய வேண்டிய நிலைமை கமலஹாசனுக்கு ஏற்பட்டுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்


மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்துள்ளது. எதிர்வரவுள்ள தேர்தகில் அவரது கட்சி திமுகவுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சி பிரசாரம் செய்யும் எனவும், 2025இல் அக்கட்சிக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நிர்பந்தம் காரணமாக திமுகவுக்கு சென்று சரணடைய வேண்டிய நிலைமை கமலஹாசனுக்கு ஏற்பட்டுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

Tap to resize

Latest Videos

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் மூத்த நடிகரான கமல்ஹாசன் அரசியல் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என கட்சியை ஆரம்பித்தார். தற்போது கமலஹாசன் தி.மு.க பக்கம் இணைந்துள்ளார். அரசியல் என்பது கடினமான வேலை, கொள்கை அரசியல் என்பது ஒரு கடினமான வேலை. யாரையும் சாராமல் ஒரு மையமாக இருக்க வேண்டும் என்பது அவரின் அரசியல் நிலைப்பாடாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் திமுகவில் இணைந்துள்ளது இத்தனை ஆண்டுகாலமாக இருந்த அவர்களின் தொண்டர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.” என்றார்.

இந்த நேரத்தில் என்னுடைய வேண்டுகோள் தமிழகத்தில் மாற்றத்தை யாரெல்லாம்  விரும்புகிறீர்களோ ஒரே ஒரு கட்சி பாஜகதான் என அண்ணாமலை கூறினார். தமிழகத்தில் மாற்றங்களை கொடுக்க வேண்டும் என்றால் பாஜகவால் மட்டும் தான் முடியும் எனவும் அண்ணாமலை கூறினார்.

கமலஹாசனுக்கு இருக்க கூடிய நிர்பந்தம் காரணமாக அவர் திமுகவுக்கு சென்று சரணடைய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இது எப்போவோ நடந்திருக்க வேண்டும். இப்போ து நடந்துள்ளது. திமுகவின் நிலைப்பாட்டில்தான் கமல்ஹாசன் செல்ல வேண்டும் என்பது கவலை அளிக்கிறது என அண்ணாமலை வேதனை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “ஜாபர் சாதிக் கைது வழக்கில், இன்னும் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அவர்களை எல்லாம் என்.சி.பி அதிகாரிகள் கண்டுபிடித்து தமிழக மக்கள் முன்னால் நிறுத்த வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு. கிணறு தோண்ட தோண்ட பூதம் வரும் கதை போல யாரெல்லாம் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ எவ்வளவு பெரிய மனிதராக இருந்தால் கூட அவர்கள் மீது என்.சி.பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய பிரச்சனைகள் பற்றி நடிகர்கள் வாய் திறந்தால் எப்படி படத்தை ரிலீஸ் பண்றது. தமிழகத்தின் பிரச்சினைக்கு இன்றைக்கு ஏன் நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பதை நான் திரும்ப கேட்கிறேன். அவர்கள் சமூக ஆர்வலர்களாக இருக்கிறார்களா? சாமானியவர்களா? ரோட்டில் மக்கள் பிரச்சனை பார்க்கின்றவர்களா? எதற்கு எடுத்தாலும் நடிகர்கள் தான் பேச வேண்டும் என்பதிலிருந்து வெளியே வரவேண்டும். அவர்கள் ஒரு வட்டத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.” என குற்றம் சாட்டினார்.

நடிகர்களுடைய வேலை நடிப்பது மட்டும்தான். சினிமா வேறு, அரசியல் வேறு, சினிமாவில் கை தட்டி பார்ப்பார்கள், அரசியலில் அது நடக்குமா என்று தெரியாது. இந்தியாவில் இருக்கக்கூடிய பல தலைவர்கள் அரசியலுக்கு வந்தார்கள். இதற்கு கமலஹாசன் சிறந்த உதாரணம். அரசியல் என்பது 24 மணி நேரமும் செய்யக்கூடிய ஒரு பணி என அண்ணாமலை தெரிவித்தார்.

குப்பையில் கிடந்த தங்க காப்பு: உரியவரிடம் கொடுத்த சேலம் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு!

டெக் பார்க் அமைப்பதற்கு எத்தனையோ இடங்கள் உள்ளது. திமுக ஆட்சி புதிதாக டெக் பார்க் அமைக்கிறார்கள் என்றால் பக்கத்தில் அவர்கள் நிலம் வாங்கி இருப்பார்கள். மக்கள் இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என அண்ணாமலை சாடினார்.

தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “அவர் எனக்கு மாமனா மச்சானா? அவர் ஏன் ராஜினாமா செய்தார் என அவரிடம் தான் கேட்க வேண்டும். யூகங்களுக்கு ஏன் பதில் சொல்ல வேண்டும்.” என தெரிவித்தார்.

“அரசியலுக்கு நான் வந்திருப்பது மக்கள் பணி செய்வதற்கு தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு. 2026 முக்கியமான தேர்தல், தமிழகத்தில் சாக்கடையில் சுத்த செய்ய வேண்டும். அது முழு நேரம் இருந்தால் மட்டுமே சாத்தியம். பாராளுமன்றத்தில் யார் இருப்பது என்பதை கட்சி முடிவு செய்ய வேண்டும்.” என அண்ணாமலை கூறினார்.

தேர்தலுக்கு நாங்கள் எப்போதே தயாராகி விட்டோம் என்ற அண்ணாமலை, தேர்தலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் இது ஒரு சரித்திர தேர்தலாக இருக்கும் என்ற நாங்க நம்புகிறோம். நாங்களும் பத்திரிக்கையாளர் மீது கோபத்தில்தான் இருக்கின்றோம். எங்கள் கட்சி 25 சதவீதத்திற்கு மேல் உள்ளதை 18 சதவீதம் என்று போடுகிறார்கள் என அண்ணாமலை சாடினார்.

click me!