Thoppur Accident : தொப்பூரில் நடந்தது விபத்தல்ல... கொலை - இனியும் இது நடக்க கூடாது- அன்புமணி ஆவேசம்

By Ajmal Khan  |  First Published Jan 25, 2024, 12:44 PM IST

மொத்தம் 400 மீட்டர் தொலைவு மட்டுமே கொண்ட தொப்பூர் கணவாய் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள அன்புமணி இந்தியாவின் வேறு எந்த பகுதியிலும் இந்த அளவுக்கு அதிகமாக விபத்துகள் நடந்ததில்லை என கூறியுள்ளார். 


தொப்பூர் வாகன விபத்து

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் பல்வேறு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரியிலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்குந்து தொப்பூர் கணவாய் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மூன்று மகிழுந்துகள் மற்றும் இன்னொரு சரக்குந்து மீது மோதிய பயங்கரமான சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Latest Videos

சரக்குந்து மோதியதில் தீப்பிடித்த முதல் மகிழுந்தில் இருந்த நால்வர் உடல் கருகி உயிரிழந்து விட்டனர். இரண்டாவது மற்றும் மூன்றாவது மகிழுந்துகளும் விபத்துக்குள்ளானதில் அவற்றில் பயணம் செய்தவர்கள் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர் விபத்துக்குள்ளான சரக்குந்துகளில் ஒன்று பாலத்திலிருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் அதன் ஓட்டுனரும், உதவியாளரும் வெளியில் குதித்து தப்பியுள்ளனர். இந்த விபத்துகளில் மொத்தம் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

9ஆண்டுகளில் 1000 உயிரிழப்பு

தொப்பூர் பகுதியில் நேற்று நடந்ததை விபத்து என்று கூற முடியாது, மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் நடந்த கொலை என்று தான் கூற வேண்டும். தொப்பூர் பகுதி நெடுஞ்சாலை நாளுக்கு நாள் அதிக விபத்து நடக்கும் பகுதியாகவும், உயிர்ப்பலி வாங்கும் சாலையாகவும் மாறி வருகிறது என்பதையும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் தொடர்ந்து  வலியுறுத்தி வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன் தொப்பூரில் ஒரே நேரத்தில் 15 ஊர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 400 மீட்டர் தொலைவு மட்டுமே கொண்ட தொப்பூர் கணவாய் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் வேறு எந்த பகுதியிலும் இந்த அளவுக்கு அதிகமாக விபத்துகள் நடந்ததில்லை. 

விபத்து அல்ல.. படுகொலை..

தொப்பூர் கணவாய் பகுதியில் நடைபெறும் சாலை விபத்துகளுக்கு மனிதத் தவறுகளை விட, தேசிய நெடுஞ்சாலையின் அபத்தமான வடிவமைப்பு தான் காரணம் என்பதையும் பல்வேறு தருணங்களில் சுட்டிக் காட்டியுள்ளேன். தொப்பூர் பகுதியில் விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்ற அக்கறை மத்திய, மாநில அரசுகளுக்கு இருந்திருந்தால் சாலை வடிவமைப்பை மாற்ற எப்போதோ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தொப்பூர் சாலையின் வடிவமைப்பை மாற்றுவது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் இதுவரை ஒரு கடிதம் கூட எழுதவில்லை. அந்த வகையில் பார்த்தால் தொப்பூரில் நடந்தது  விபத்து அல்ல... மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் நடந்த கொடூர படுகொலை என்று தான் கூற வேண்டும். இந்த உயிரிழப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

உயர்மட்ட சாலை அமைத்திடுக

மத்திய அரசால் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள தொப்பூர் உயர்மட்டச் சாலை திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவது மட்டும் தான் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு ஒரே தீர்வு ஆகும். இதை உணர்ந்து  தொப்பூர் உயர்மட்ட சாலை அமைக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகளை உடனடியாக இறுதி செய்து பணிகளைத் தொடங்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தொப்பூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் நிதியுதவி வழங்கப்பட வேண்டும். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

தொப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

click me!