இதெல்லாம் எனக்கு சாதாரணம்; சும்மா இருக்க மாட்டோம்: அன்புமணி வார்னிங்!

By Manikanda Prabu  |  First Published Jul 30, 2023, 3:46 PM IST

தமிழகத்தின் அரசியல் எல்லாம் தனக்கு சர்வ சாதாரணமானது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்


நெல்லை பாளையங்கோட்டையில் பாமக 2.0 விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட பாமக செயலாளர் சியோன் தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், வார்த்தைக்கு வார்த்தை திராவிட மாடல் எனக்கூறும் திமுக அரசு, தாமிரபரணியை காக்க என்ன செய்துள்ளது என கேள்வி எழுப்பினார். கூவம் நதியைப் போன்று, தாமிரபரணி, வைகை நதிகளையும் திராவிட கட்சிகள் சாக்கடையாக மாற்றி விட்டதாகவும் அவர் விமர்சித்தார்.

Tap to resize

Latest Videos

பாமக 2.0 என்பது அனைவருக்கும் வளர்ச்சி; அனைவருக்கும் உரிமை என்பதை உள்ளடக்கியது என விவரித்த அன்புமணி ராமதாஸ், “திமுக, அதிமுக மீது கோபமாக உள்ளனர். 50 ஆண்டுகாலம் இரு கட்சிகளும் ஆட்சி செய்தது போதும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள். தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் பின் தங்கிய மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். எங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தால் முன்னேறிய தமிழகத்தை உருவாக்கி சிங்கப்பூருடன் போட்டியிட செய்வோம். இந்தியாவின் சுகாதாரத் துறையில் 50 ஆண்டுகளில் செய்யாததை ஐந்து ஆண்டுகளில் நான் அமைச்சராக இருந்தபோது செய்து கொடுத்தேன். இந்தியாவிற்கே பல நல்ல திட்டங்களை கொண்டு வந்த எங்களால் தமிழகத்திற்கு எவ்வளவு செய்ய முடியும்” என்றார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் இருந்தபோது உலகத்தின் மிகப்பெரிய அரசியல் மாபியாவை தன்னந்தனியாக எதிர்த்தவன் என கூறிய அன்புமணி, “தமிழகத்தின் அரசியல் எல்லாம் எனக்கு சர்வ சாதாரணமானது. நாகரீக அரசியல் செய்து வருகிறோம். எங்களால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்.” என்றார்.

இரு திராவிட கட்சிகளுமே, பாமகவுக்கு சாதிய கட்சி என்ற அடையாளத்தை பூசி விட்டதாக குற்றம் சாட்டிய அன்புமணி ராமதாஸ், திமுக, அதிமுகவுக்கு மாறி மாறி வாய்ப்பளித்த மக்கள், பாமகவுக்கு வாய்ப்பளித்தால் தமிழ்நாட்டை மாற்றிக் காட்டுவோம் என்றார். அடுத்த மூன்று ஆண்டுகளில் பாமக ஆட்சிக்கு வரப்போகிறது என்றும் அவர் அப்போது ஆருடம் தெரிவித்தார்.

யாத்திரைக்கு பதிலாக அண்ணாமலை குற்றாலத்தில் சிகிச்சை எடுக்கலாம்: ஈவிகேஸ் இளங்கோவன்!

“ஆட்சி செய்த அரசுகள் வேளாண் கட்டமைப்புகளை உருவாக்கி வந்திருக்க வேண்டும். அதையெல்லாம் செய்யாததால் தக்காளி உள்ளிட்ட விவசாய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரியாணியை விட தக்காளி சாதத்தின் விலை உயர்ந்துவிட்டது. இந்த நிலைக்கு காரணம் திராவிட அரசுதான்.” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

40 ஆண்டுகளுக்கு முன்பு தென்மாவட்டங்களில் நிறைய கலவரங்கள் நடைபெற்றதாகவும், அவற்றை தீர்த்து வைக்க பாமக நிறுவனர் ராமதாஸை காவல்துறையினர் அழைத்ததாகவும் கூறிய அவர், இவற்றையெல்லாம் காவல் துறையினர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

“ஆட்சிக்கு வரும் முன்னே திமுக ஒரு பேச்சும், ஆட்சிக்கு வந்த பின்னர் அந்தர்பல்டி  அடித்து ஒரு பேச்சும் பேசுகிறது. தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு பணி வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் என சொன்ன திமுகவின் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தென் மாவட்டங்களில் அதிக கலவரம் வர காரணம் தொழில் வேலை வாய்ப்பு இல்லாததுதான். தென் மாவட்டங்களில் தொழில்களை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அன்புமணி வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மண்ணையும், மக்களையும் தொட்டால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். நெய்வேலியில் நிலம் கையகப்படுத்தினால் திமுகவுக்கான கவுண்டன் தொடங்கிவிடும். விவசாயிகளுக்கான கேடயமாக அன்புமணியும் பாமகவும் இருப்போமே தவிர நாங்கள் அவர்களை கேடயமாக மாற்ற மாட்டோம்.” என்றார்.

click me!