வாக்குறுதியை நிறைவேற்ற கோரி போராடினால் கைது செய்வதா? இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள் - டிடிவி தினகரன் எச்சரிக்கை

By Velmurugan s  |  First Published Jan 30, 2024, 7:22 PM IST

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ உறுப்பினர்களான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பது  கண்டனத்திற்குரியது. 


அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 3.5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி வரன்முறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ சங்கத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 30 மாதங்கள் கடந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதோடு, காலம் காலமாக பெற்று வந்த சரண் விடுப்பை (Surrender Leave) காலவரையின்றி நிறுத்தி வைத்திருப்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

Latest Videos

மதுரை விமான நிலையத்தில் கட்டண கொள்ளை; ஆதாரத்துடன் நிரூபித்த ஓட்டுநர் - டிஸ்மிஸ் செய்யப்பட்ட வடமாநில தொழிலாளி

எதிர்கட்சித் தலைவராக இருந்த போது அரசு ஊழியர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்ட மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் அரசு ஊழியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தயங்குவது ஏன் ?

நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வதன் மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரலாம் என்ற ஜனநாயக விரோதப் போக்கை தமிழக அரசு இத்துடன் கைவிட வேண்டும். 

கோவில்பட்டியில் காவலரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கிய நபர் வட்டி கட்ட முடியாமல் தற்கொலை

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிப்பதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக  பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
 

click me!