
திருப்பூர்
திருப்பூரில் தண்ணீர்க் கேட்டு மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் ஊராட்சி அலுவலர்கள் மூச்சுத் திணறினர்.
பூளவாடி ஊராட்சி, குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது. இந்த ஊராட்சிக்கு அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. பத்து ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்துவிட்டதே தவிர, இங்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு அதிகரிக்கப்பட இல்லை. அதனால், வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வழங்கப்படும் குடிநீரும் பத்து நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே கிடைப்பதால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் இப்பகுதி மக்கள். குடிநீரை விலைக் கொடுத்து வாங்கும் அவல நிலைக்கு அரசு எங்களை தள்ளிவிட்டது என்பது இவர்களின் மன வருத்தமாக தெரிவிக்கின்றனர்.
“திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து பூளவாடி பகுதிக்குக் குடிநீர் விநியோகம் செய்தால் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம் என்று பூளவாடி ஊராட்சி அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்த தகவலறிந்ததும் நிகழ்விடத்திற்கு வந்த குடிமங்கலம் ஆணையாளர் மணிவண்ணன் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், திருமூர்த்தி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் நிறைவடைந்து விட்டது. முதல் கட்டமாக 15 ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
விரைவில் பூளவாடி, பெரியபட்டி, கோட்டமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரை மின் மோட்டார் வைத்து திருடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையாளர் கூறினார்,
அதனைக் கேட்ட மக்கள், அமைதிக்காத்தும், போராட்டத்தை விலக்கிக் கொண்டும் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.