Jallikattu: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 21 காளை அடக்கி முதலிடம் பிடித்த கார்த்திக்கிற்கு கார் பரிசு..

By Thanalakshmi VFirst Published Jan 17, 2022, 6:42 PM IST
Highlights

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கார்த்திக்கிற்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
 

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையன்று மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு அடுத்த நாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்தநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு பொங்கலையொட்டி கடந்த 14-ந் தேதி அவனியாபுரத்திலும், நேற்று முன்தினம் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு நேற்று அமலில் இருந்ததால் ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு, இன்று அங்கு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. களமிறங்கும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு தலா ஒரு தங்ககாசு பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல் போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த காளைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் காரும், சிறந்த வீரருக்கு எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசளிக்காக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஐந்தாயிரத்திற்கும் குறையாமல் ஒவ்வொரு காளைக்கும் பரிசுகள் வழங்கப்பட இருப்பதாக விழாக் குழு அறிவித்துள்ளது.போட்டியையொட்டி, பாதுகாப்புப் பணியில் ஆயிரத்திற்கும் அதிகமாக போலீஸார் ஈடுபட்டுள்ளனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டியைக் காண குறைந்த அளவிலான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விறுவிறுப்புடன் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் 8 சுற்றுகளில் 1020 காளகள் அவிழ்த்து விடப்பட்டன.  இதில் 21 காளைகளை பிடித்த கருபாயூரணி கார்த்திக் முதலிடம் பிடித்தார். முதலிடம் பிடித்த கார்த்திக்கிற்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.சித்தாலங்குடி கோபால கிருஷ்ணன் 13 காளைகளை அடக்கி 3 ஆம் இடம் பிடித்தார். 18 காளைகளை பிடித்த அலங்காநல்லூரை சேர்ந்த ராம்குமார் 2 ஆம் இடம் பிடித்தார். 

click me!