சுடுகாட்டை குத்தகைக்கு எடுத்ததாக சொல்லி மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதை எதிர்த்த அதிமுக பிரமுகர்...

First Published Jan 4, 2018, 8:51 AM IST
Highlights
AIADMK person opposed the burial of the grandma body


கடலூர்

சுடுகாட்டை குத்தகைக்கு எடுத்ததாக சொல்லி மூதாட்டியின் உடலை அடக்க செய்வதற்கு அதிமுக பிரமுகர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மூதாட்டியின் இறுதி ஊர்வலத்தை காவலாளர்கள் தடுத்து நிறுத்தி வேறொரு இடத்தில் அடக்க செய்ய அறிவுறுத்தினர்.

கடலூர் மாவட்டம், வேப்பூர் மற்றும் கூட்டுரோடு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு பகுதி மக்களுக்கும் தனித்தனியே சுடுகாடு உள்ளது.

இதில் கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுடுகாடாக பயன்படுத்தி வந்த இடம், திட்டக்குடியில் உள்ள ஒரு கோவிலுக்கு சொந்தமானதாம்.

இந்த இடத்தை அதிமுக-வைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர், கோவிலில் இருந்துதான் குத்தகைக்கு எடுத்து இருப்பதாகவும், எனவே, இங்கு உடல்களை புதைக்கவோ, எரிக்கவோ கூடாது என்றும் கூட்டுரோடு பகுதியில் வசிப்பவர்களிடம் தெரிவித்திருந்தார்.

நேற்று, வேப்பூர் கூட்டு ரோடு பகுதியைச் சேர்ந்த பொன்னுத்தாயி (60) என்பவர் உயிரிழந்தார். அவரது உடலை வழக்கம் போல் அங்குள்ள சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல முடிவு எடுத்திருந்தனர்.

இதனையறிந்த அதிமுக பிரமுகர், அங்கு வந்து பொன்னுத்தாயின் உடலை அந்தப் பகுதியில் புதைக்க எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. எனினும், பொன்னுத்தாயின் உடலை கூட்டுரோடு பகுதி சுடுகாட்டுக்கு உறவினர்கள் எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து அறிந்த வேப்பூர் காவலாளர்கள் விரைந்து சென்று, இறுதி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி, அங்கு கொண்டுச் சென்றால் தேவையில்லாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும், வேப்பூரில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்து செல்லுமாறும் காவலாளர்கள் அறிவுறுத்தினர்.

மேலும், காவலாளர்கள் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.  இதனையடுத்து பொன்னுதாயின் உடலை வேப்புர் சுடுகாட்டுக்கு சென்று அடக்கம் செய்தனர்.

அதிமுக பிரமுகர் இறந்தவர்களை சுடுகாட்டில் புதைக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

click me!