
4500 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகத்தின் உடல் பேல்வேறு இடர்பாடுகளுக்கிடையே மீட்கப்பட்டது. உடலை மீட்பதில் போலீசார் ஒத்துழைக்கவில்லை என்று அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தலைமலையில் சஞ்சீவி பெருமாள் கோயில் உள்ளது. இந்த சஞ்சீவி பெருமாள் கோயில், 3500 அடி உயரத்தில் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள், சாமி தரிசனம் செய்தும் தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தியும் வழிபட்டு வருகின்றனர்.
கோயில் பிரகாரத்தை சுற்றி வருவதற்கு இரண்டு அங்குல இடம் மட்டுமே உள்ளது. ஆபத்தான இந்த வழியில்தான் பக்தர்கள் கோயில் பிரகாரத்தை சுற்றி வருகின்றன. இந்த மலைப் பாதையில் கோயில் பிரகாரத்தை சுற்றி வர வேண்டாம் என்று கோயில் நிர்வாகம் சார்பில் அங்கு எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், பக்தர்கள் நிர்வாகத்தின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், இரண்டே அங்குலம் உள்ள ஆபத்தான பாறை வழியில், கோயிலைச் சுற்றி வருகின்றனர்.
ஆறுமுகம், கோயில் பிரகாரத்தை மூன்றாவது முறை சுற்றி வரும்போது, தவறி கீழே விழுந்தார். இதைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கோயில் நிர்வாகத்துக்கு அவர்கள் தகவல் அனுப்பினர். போலீஸ் நிலையத்துக்கும் தகவல் அனுப்பப்பட்டது.
கோயில் அமைந்துள்ள பகுதி திருச்சியில் மாவட்டத்தில் அமைந்திருந்தாலும், கோயிலுக்கு அருகில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் நிலையம் உள்ளது. இதனால் காவல் நிலையத்திடையே எல்லை பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதனால் மீட்பு பணி தாமதமாக தொடங்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.
இதைனையடுத்து, ஆறுமுகத்தை தேடும் பணியில், நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி போலீசார், வனத்துறையினர் மற்றும் புளியம்பட்டி, கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் மாலை நேரம் வரை தேடும் பணியை போலீசார் தொடர்ந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாக ஆறுமுகத்தை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
ஆறுமுகத்தை தேடும் பணியில், அவரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்களும் தேடி வந்தனர். கரடு, முரடான பாதையில் மலை மீது ஏறியும் ஆறுமுகத்தை தேடினர். அப்போது ஆறுமுகம் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.
ஆறுமுகத்தின் உடலை மீட்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர். மலைப்பாதை கரடு, முரடாக இருந்ததால் உடலை எளிதில் கொண்டு வர முடியவில்லை. உடலை கொண்டு வர போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் உதவவில்லை என்றும் ஆறுமுகத்தின் உறவினர்கள் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கூறினர்.
இதையடுத்து, சூப்பிரண்டு அருள் உத்தரவின்பேரில், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்பட 8 பேர் ஆறுமுகத்தின் உடலை தூக்கி வர உதவி செய்தனர். பல்வேறு இடர்பாடுகளுக்குப் பிறகே ஆறுமுகத்தின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக முசிறி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மருத்துவமனையில் இருந்து ஆறுமுகத்தின் உடல், அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.