
வழக்கறிஞராகப் பதிவு செய்தவர்களின் பள்ளிப் படிப்பு சான்றிதழ், பட்டப் படிப்பு சான்றிதழ்களை சரி பார்க்குமாறு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது, கல்லூரி நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு இடையே வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் சிலர் தலையிட்டு பிரச்னையை ஏற்படுத்தியதாக நீதிபதியிடம் கூறப்பட்டது. இதை அடுத்து, இந்த விவகாரத்தில் போலீஸார் அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதி கூறியிருந்தார். மேலும் சட்டக் கல்வி மாணவர்கள் சேர்க்கைக்கான தகுதியை ஆய்தல், வழக்கறிஞர்கள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதைத் தடுப்பது இவை குறித்து பார் கவுன்சிலும் அரசும் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று நீதிபதி கிருபாகரன் முன்னர் வந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தியவை...
வழக்கறிஞர்களாகப் பதிவு செய்தவர்களின் சான்றிதழ்களைச் சரிபார்க்கும் பணி, தமிழ்நாடு பார் கவுன்சில் அலுவலகத்தில் நடந்து வரும் நிலையில், பார் கவுன்சில் வளாகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இந்திய பார் கவுன்சில் இணை தலைவர், தமிழ்நாடு பார் கவுன்சில் செயலர் ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
சட்டப் படிப்பை முறையாக முடித்தவர்கள், பணி ஓய்வு பெற்ற பிறகும், வழக்கறிஞர் தொழில் புரிய எந்தத் தடையும் இல்லை. அவர்கள் வழக்கறிஞராக தொழில் புரியலாம். முழு நேர அரசு மற்றும் தனியார் பணியில் இருந்தபடி, மோசடியாக சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவர்கள், பணி ஓய்வுக்குப் பின், வழக்கறிஞராக பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. அவ்வாறு, மோசடியாக பட்டம் பெற்றவர்களால், வழக்கறிஞர் தொழிலுக்கு அச்சுறுத்தல் உள்ளது.
வங்கி, காப்பீட்டு நிறுவனங்களின் வழக்கறிஞர்கள் பட்டியலில், மோசடியாக பட்டம் பெற்றவர்கள் இடம் பெற்று விடுகின்றனர். எனவே, சான்றிதழ் சரிபார்ப்பு பணியின் போது, உண்மையாக சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவரா அல்லது மோசடியாக பெற்றவரா என்பதைப் பார்க்க வேண்டும். முழு நேர பணியில் இருந்தால், அவர்களின் வருமான வரி விவரங்கள், குடும்ப அட்டையை சரிபார்க்க வேண்டும். இவ்வகையில், முறையாக கல்வி பெறாமல், மோசடியாக சட்டப் படிப்பில் சான்றிதழ் பெற்று வழக்கறிஞர்களாகப் பதிவு செய்தவர்களை அடையாளம் காண முடியும். இப்படி மோசடியாகப் பட்டம் பெற்றவர்கள்தான், கட்டப்பஞ்சாயத்து போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
சட்டப் படிப்புக்கான சான்றிதழ் மட்டும் அல்லாமல், 10ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்பு சான்றிதழையும் சரிபார்க்க வேண்டும். மோசடியாக பட்டம் பெற்றவர்களை அடையாளம் கண்டு சுத்தப் படுத்தவில்லை என்றால் வழக்கறிஞர் தொழில் சுத்தமாக இருக்காது. சான்றிதழ்களை சரிபார்க்காமல், பார் கவுன்சிலுக்கு தேர்தல் நடத்தப்பட்டால், போலியாக, மோசடியாக பட்டம் பெற்றவர்களும், குற்றப் பின்னணி உடையவர்களும்தான், தேர்தலில் ஆதிக்கம் செலுத்துவர். எனவே, முழுமையான சான்றிதழ் சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, அனில் தவே தலைமையிலான மத்திய ஆய்வுக் குழு முன் தாக்கல் செய்து, உரிய உத்தரவுகளைப் பெற வேண்டும். முறையான கல்வித் தகுதி பெறாதவர்கள், முழு நேரப் பணியில் இருந்தபடி, மோசடியாக சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவர்கள், திறந்தவெளி பல்கலையில் பட்டம் பெற்றவர்கள், கிரிமினல் பின்னணியை மறைத்தவர்கள் ஆகியோரை, பார் கவுன்சில் பதிவில் இருந்து களையெடுக்க வேண்டும்.
இப்படி உத்தரவிட்டார் நீதிபதி கிருபாகரன். இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணை, வரும்17ஆம் தேதி மீண்டும் வருகிறது.