
ஈரோடு மாவட்டம் பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோயில் திருவிழாவில், தீ மிதித்து தனது நேர்த்திக் கடனைச் செலுத்தினார் அதிமுக பெண் எம்.பி சத்தியபாமா.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ளது பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில். சுமார் 700 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயிலில் நடைபெறும் திருவிழாவின் போது, தீமிதி வைபவம் சிறப்பாகக் கொண்டாடப்படும். இப்பகுதி மக்கள் இங்கே அம்மனுக்கு நேர்ந்து கொண்டு, தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துவது வழக்கம்.
கொண்டத்துக் காளியம்மனை வேண்டிக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினால் நாம் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஜனவரி மாதங்களில் நடைபெறும் இந்த குண்டம் இறங்கும் வைபவத்தில், இந்த முறை, பக்தர்களோடு பக்தராக அதிமுக எம்பி சத்தியபாமாவும் கலந்து கொண்டு, குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
கடந்த டிசம்பர் 28ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது திருவிழா. இந்தத் திருவிழாவின் ஒரு பகுதியாக, இன்று காலை குண்டம் இறங்குதல் விழா நடைபெற்றது. தீக்குண்டம் இறங்குவதற்காக, 15 நாள் விரதமிருப்பது மரபு. இந்த குண்டம் இறங்குதல் நிகழ்வுக்காக, கோபி, ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை என பக்கத்துக்கு ஊர்களில் இருந்தும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் பலர் திரளாக இந்த விழாயில் பங்கேற்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடந்தது.
இதற்காக நேற்று மாவிளக்கு காப்பு கட்டுதல், பூத வாகன காட்சி ஆகியவை நடைபெற்றது. அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள 60 அடி குண்டத்தில் டன் கணக்கில் எரி கரும்பு குவிக்கப்பட்டிருந்து. ஆகம விதிப்படி நேற்று இரவு 10 மணி அளவில் நெருப்பு மூட்டினர்.
அதன் பின் பூ மிதிக்க வசதியாக குண்டத்தை காலை 6 மணிக்கு தயார் செய்தனர். பூ மிதிக்கும் பக்தர்கள் வெள்ளாபாளையம் பிரிவில் துவங்கி திருகினிபாலம் பெருமாள் கோயில் வரை வரிசையில் நின்றிருந்தனர். பூ மிதி நிகழ்ச்சியை முன்னிட்டு காலை 6 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.தொடர்ந்து திருக்கொடி தீபம் ஏற்றப்பட்டு குண்டத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது.
அதன்பின் குண்டத்தில் இருந்த நெருப்பை இரு கைகளால் அள்ளி வீசி 6.30க்கு தலைமை பூசாரி குண்டம் இறங்கி துவக்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து வீரமக்கள், முக்கியப் பிரமுகர்கள், அரசு உயரதிகாரிகள், போலீள் அதிகாரிகள் என பலரும் வரிசையாக குண்டம் இறங்கினர். சுமார் 25 ஆயிரம் பேர் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
சென்ற வருடமும் ஜன.12 ம் தேதி குண்டம் இறங்கும் திருவிழா நடைபெற்றது. அப்போது, கடும் வறட்சி நிலவியது. ஆனாலும், தடப்பள்ளி வாய்க்காலில் பூமிதிக்கும் பக்தர்கள் நீராட வசதியாக கோவில் சார்பில் ஷவர் குளியலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட நிலையிலும் 30 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டு பூமிதித்தனர்.
ஆனால் இம்முறை தண்ணீர் பிரச்னை இல்லை. ஆனால், போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டத்தால், கோபியில் இருந்து பாரியூர் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப் பட்ட போதிலும் வெளியூர் பக்தர்கள் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்பட்டது.
இந்த விழாவில் கலந்து கொண்டு திருப்பூர் மக்களவை உறுப்பினர் சத்தியபாமா குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.