
மாமல்லபுரம் பேரூராட்சியில் அதிமுக கவுன்சிலரின் பெயர் வாக்காளர் பட்டியலில் வெவ்வேறு பகுதிகளில் மூன்று முறை இடம்பெற்றிருந்தது. இதையடுத்து கூடுதலாக இடம் பெற்றவற்றை கோட்டாட்சியர் இரத்து செய்தார்.
மாமல்லபுரம் ராஜீவ்காந்தி சாலையில் வசித்து வருபவர் பூங்குழலி பெரியார். இவர், மாமல்லபுரம் பேரூராட்சி 8-ஆவது வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் இதே வார்டில், அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுவதற்காக தேர்தல் அலுவலரிடம் பூங்குழலி மனுதாக்கல் செய்தார்.
கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையின் போது (தேர்தல் ரத்து அறிவிப்பு வரும் முன்), வாக்காளர் பட்டியலில் பூங்குழலியின் பெயர் 3 இடங்களில் பதிவாகி இருப்பதாக சிலர் ஆட்சேபணை தெரிவித்தனர்.
இந்த நிலையில், இதுகுறித்து செங்கல்பட்டு கோட்டாட்சியரிடம் பூங்குழலி மனு அளித்தார். இதைத்தொடர்ந்து, பிற பகுதிகளில் தவறுதலாக இடம்பெற்றிருந்த பூங்குழலியின் பெயரை கோட்டாட்சியர் ரத்து செய்து அறிவித்தார்.