குறைந்து வருகுது நீர்மட்டம்; சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு…

 
Published : Oct 08, 2016, 01:03 AM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
குறைந்து வருகுது நீர்மட்டம்; சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு…

சுருக்கம்

பூண்டி ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு எழலாம் எனக் கருதப்படுகிறது.

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக விளங்குகிறது பூண்டி ஏரி. இந்த ஏரியில் சேமிக்கப்படும் நீர், இணைப்புக் கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பூண்டி ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடி நீர் பருவமழையால் மட்டுமே நிரம்பாது என்பதால், கோடை காலத்தில் சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னையை கருத்தில் கொண்டு கடந்த 1983-ஆம் ஆண்டு தமிழக - ஆந்திர அரசுகளுக்கிடையே தெலுங்கு - கங்கை ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்படி, ஆந்திர மாநிலம் ஆண்டுதோறும் 12 டி.எம்.சி., நீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். இதில், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும், பின்னர் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும் திறந்து விட வேண்டும். தற்போதைய சூழலில், தண்ணீர் இருப்பை பொருத்து சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரை வழங்க வேண்டிய 8 டி.எம்.சி., தண்ணீரை இதுவரை ஆந்திர அரசு திறந்து விடவில்லை.

இதனால், பூண்டி ஏரி முற்றிலுமாக வறண்டு போகும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள், ஆந்திர, மாநில அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தற்போது, பூண்டி ஏரியில் 500 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதில், குடிநீர் தேவைக்காக நீரேற்று நிலையத்துக்கு தினமும் வினாடிக்கு 50 கன அடி நீர் வீதம் திறந்து விடப்படுகிறது.
சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, ஆந்திர மாநிலத்தில் இருந்து வர வேண்டிய தண்ணீர் அல்லது வடகிழக்கு பருவழை என இரண்டில் ஏதாவது ஒன்று இருந்தால் மட்டுமே சமாளிக்க முடியும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், பூண்டி ஏரி முழுமையாக நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!