ரெண்டு நாள் உள்ள தூக்கி போட்டா தாங்குவாரா விஜய்: தயாரிப்பாளர் ராஜன் பேச்சு

By SG Balan  |  First Published Jun 18, 2023, 10:10 PM IST

மெர்சல் படத்தில் ஒரு வசனத்தால் வந்த சர்ச்சைக்குப் பின், வீட்டில் ரெய்டு நடந்த பின் விஜய் இப்போது வரை அரசியல் பேசவில்லை என தயாரிப்பாளர் ராஜன் கூறியுள்ளார்.


நடிகர் விஜய் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளின் கூட்டத்தைக் கூட்டி ஊக்கத்தொகை கொடுத்துள்ளார். சென்னை நீலாங்கரையில் இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் அரசியல் தொடர்பாக சில கருத்துகளைக் கூறிவிட்டதால், விஜய் அரசியலுக்கு வர ஆயத்தமாகிறார் என்று பேசப்படுகிறது.

விஜய் அரசியலுக்கு வந்தால் சாதிப்பாரா மாட்டாரா என்று விவாதங்களும் நடக்கின்றன. இந்நிலையில் மூத்த தயாரிப்பளர் கே. ராஜன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய் அரசியலுக்கு வருவது பற்றிப் பேசியுள்ளார். அதில் அவர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் ஆகியோரையும் தொட்டு விஜய் அரசியல் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று கோருவதாகத் தெரிவித்துள்ளார்.

Latest Videos

undefined

விஜய் எடுத்துள்ள நடவடிக்கைகள் அரசியலுக்கு வருவதற்கான அச்சாரம்தான் என்று கூறிய ராஜன், அவர் கண்டிப்பாக வருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். "இதுவரை இருந்த விஜய் வேறு. அவர் அதிகம் பேசமாட்டார். சிரிப்பதுகூட அளவாகத்தான் சிரிப்பார். அது அரசியலுக்கு ஒத்துவராது. எம்ஜிஆர் போல சிரித்துக்கொண்டே இருக்கவேண்டும். மக்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும். மக்களுக்கு ஏதாவது நல்லது செய்துகொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்" என்றும் ராஜன் ஆலோசனை கூறியுள்ளார்.

அரசியலில் ஏற்படும் சவாலான தருணங்கள் பற்றியும் எச்சரிக்கும் வகையில் பேசிய ராஜன், "நாளைக்கே தூக்கி உள்ளே போட்டால், இரண்டு நாள் உள்ளே இருப்பாரா? விஜய் அதற்குத் தன்னை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். மெர்சல் திரைப்படத்தில் ஒரு வசனம் பேசியதற்காக நெய்வேலியில் அவரை காரில் தூக்கிட்டாங்க. மறுநாள் அவர் வீட்டில் ரெய்டு. அதனால் விஜய் நிலைகுலைந்துவிட்டார். அன்று முதல் இப்போது வரை அவர் அரசியல் பேசவில்லை." என்று நினைவுகூர்கிறார்.

அப்போதே அவருக்கு தில் இருந்திருக்க வேண்டும் என்றும் எதிர்த்து போராடியிருக்க வேண்டும் என்றும் கூறிய ராஜன்,  "இருக்கும் கட்சிகளை எல்லாம் சமாளிக்க வேண்டும். சமாளித்துவருவார் என நினைக்கிறேன்'' என்றும் சொல்லி இருக்கிறார்.

click me!