
தமிழகம் முழுவதும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு பாஜக தீவிரம் காட்டி வருகிறது என்று சொன்னவர் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் தமிழிசை சௌந்தரராஜன் நேற்றுத் தெரிவித்தது:
“தமிழகம் முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தில் இப்பணியைத் தொடங்கி வைத்துள்ளேன்.
பாஜகவுக்கு விவசாயிகளின் மீது மிகுந்த அக்கறை உள்ளது. இப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக 34 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த ஆய்வுகளின் முடிவில், விவசாயிகளுக்கு பாதகம் என்ற சூழல் வருமானால் அத்திட்டத்தை தமிழக பாஜக எதிர்க்கும்.
மாறாக பிற கட்சிகள் புதுக்கோட்டை பகுதி மக்களைத் திசைதிருப்பும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மீத்தேன் திட்டத்தை பாஜக அரசு ரத்து செய்தது. அதேபோல விவசாயிகளுக்கு எதிரான எந்தச் செயலும் நடைபெறாது.
நீட் தேர்வைப் பொருத்தவரை ஒரு மருத்துவர் மற்றும் கட்சித் தலைவர் என்ற வகையில் வரவேற்கிறேன். இதன்மூலம் கிராமப்புற மாணவர்களுக்கும் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் 29 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2800 இடங்கள் நிரப்பப்படுகின்றன. அவை கல்வித் தகுதியை பொருட்டாகக் கருதாமல் கட்டணம் செலுத்துபவர்களாகவே சேர்க்கிறார்கள். ஆனால், நீட் தேர்வு வந்தால் அவற்றிலும் கிராமப்புறத்தில் உள்ள தகுதியான மாணவர்கள் பயில வாய்ப்பு கிடைக்கும்.
ஏற்கெனவே மத்திய அரசு அறிவித்த பின்பு தமிழகத்துக்கு ஓராண்டு விதிவிலக்கு கேட்ட நிலையில், தொடர்ந்து விதிவிலக்கு கேட்பது சரியானதல்ல. திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்தாமல், மாணவர்கள் தேர்வுச் சலுகையை எதிர்பார்க்கும் சூழலை ஏற்படுத்தியிருப்பது வேதனையளிக்கிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக வெற்றியடைந்துள்ளது. அதேபோல உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களிலும் பாஜக வெற்றிபெறும்.
தமிழக அரசியலில் நிலையற்ற சூழல் நிலவி வருகிறது. மக்கள் பிரதிநிதிகள் சுதந்திரமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும். அப்போதுதான் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க முடியும்” என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் பேட்டியின்போது கிழக்கு மாவட்டத் தலைவர் தயாசங்கர், அமைப்புச் செயலர் டி.வி.சுரேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.