
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு உரிய மாற்றுப்பணி விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்ட 3 ஆயிரத்து 200 தற்காலிக செவிலியர்களில் 800 பேர் பணிநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் டி.எம்.எஸ். வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் பணி நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு உரிய மாற்றுப்பணி விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள இம்காப்ஸ் சித்த மருத்துவ மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் 75 வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு அதன் புதிய கட்டிடங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட 800 செவிலியர்களுக்கு அரசின் சார்பில் உரிய மாற்று பணி விரைவில் வழங்கப்படும். போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் உரிய முன் அனுமதியைப் பெற்று போராடி இருந்தால் காவல்துறையினர் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்க மாட்டார்கள்.
அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றிய மருத்துவர்களைப் பொறுத்த மட்டில் ஏற்கனவே அவர்கள் தற்காலிக அடிப்படையில் தான் கடந்த ஆட்சியில் பணியமர்த்தப்பட்டார்கள். சம்பந்தப்பட்ட இந்த மருத்துவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்காத வகையில் அரசின் சார்பில் பணி வாய்ப்புகளில் வருங்காலங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். பொது இடங்களில் தடுப்பூசி கட்டாயம் என்ற கட்டுப்பாடு மட்டுமே திரும்பப் பெறப்பட்டு உள்ளது. பொது மக்கள் முக கவசம் தனிமனித இடைவெளி உள்ளிட்ட அரசின் மற்ற பிற வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் இன்னும் இரண்டு மாதங்களுக்கு முக கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணிவதால் எந்த ஒரு பெரிய பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இருப்பினும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்தார்.