குழந்தைகளுக்கு சாராயம், புகையிலை பொருட்கள் விற்போர் மீது கடும் நடவடிக்கை - ஆட்சியர் உத்தரவு...

 
Published : May 17, 2018, 06:29 AM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
குழந்தைகளுக்கு சாராயம், புகையிலை பொருட்கள் விற்போர் மீது கடும் நடவடிக்கை - ஆட்சியர் உத்தரவு...

சுருக்கம்

action on the sale of tobacco products to the children - Collector order ...

விருதுநகர்
 
பதினெட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சாராயம், புகையிலை பொருட்கள், போதை பொருட்கள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவலாளர்களுக்கு விருதுநகர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக்குழு மற்றும் குழந்தைகள் நலக்குழு செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் சிவஞானம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியது: 

"விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின்கீழ் பதிவு பெற்று அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின்கீழ் 31 குழந்தைகள் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. சுமார் 1300 குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். 

மாவட்ட பதிவு பெறாமல் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் இதர விடுதிகள் அனைத்தும் இளைஞர் நீதி சட்டம் மற்றும் விடுதிகள் சட்டத்தின்கீழ் பதிவு பெற்று செயல்படவேண்டும். 

குழந்தைகள் இல்லங்களில் குழந்தைகளை சேர்க்கை மற்றும் நீக்கம் செய்யும்போது குழந்தைகள் நலக்குழுவின் ஆணை உரிய படிவத்தில் பெறவேண்டும். குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளிடம் சட்ட விதிகளுக்கு முரணாக எவ்வித கட்டணங்களும் வசூலிக்கக்கூடாது. 

வெளி மாநில, மாவட்ட குழந்தைகளை குழந்தைகள் இல்லங்களில் சேர்க்கும்போது சம்பந்தப்பட்ட மாநில, மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் ஆணை பெற்று சேர்க்க வேண்டும். 

குழந்தைகள் இல்லங்களை ஆய்வு மேற்கொள்ள அமைக்கப்பட்ட மாவட்ட ஆய்வுக்குழுவினர் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு, குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி, இல்லங்கள் சிறப்பாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும்.

மேலும், மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையினை எய்திட தொடர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மீட்கும் குழந்தைகளை குழந்தைகள் நலக்குழு முன் முன்னிலைப்படுத்த வேண்டும். 

பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களால் கைவிடப்படும் ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்க அனைத்து குழந்தைகள் இல்லங்கள், மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தை தொட்டில் வைக்க வேண்டும்.

பள்ளியில் கல்வி பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான ஆலோசனைப் பெட்டி வைக்க வேண்டும். 

பதினெட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சாராயம், புகையிலை பொருட்கள், போதை தரும் பொருட்கள் வழங்குவதோ, விற்பனை செய்யவோ கூடாது. 

அந்த செயலில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் பேசினார். 

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தகுமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன், மாவட்ட நன்னடத்தை அலுவலர் முருகன், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம், குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆரோக்கியசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் பங்கேற்றனர்.

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்தியே ஆகணும்..! அதிமுக கூட்டணிக்கு வருகிறது தவெக..? இபிஎஸ் சொன்ன முக்கிய தகவல்..!
ஜனவரி 7ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு