
செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளைப் பயன்படுத்தி, சென்னை புழல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான ‘பைல்’ ‘கவர்’ அட்டை உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வருகின்றனர்.
70 டன்
இதற்காக ரிசர்வ் வங்கி 70 டன் செல்லாத நோட்டுகளை கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் கவர்கள், பைல்கள், மாநில அரசின் பல்வேறு துறைகளின் பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
30 கைதிகள்
இதற்காக சிறப்பான பயிற்சி எடுக்கப்பட்ட 25 முதல் 30 ஆயுள் தண்டனை கைதிகள் புழல் சிறையில் இந்தபணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தமிழ் நாடு சிறைத்துறை டி.ஐ.ஜி. ஏ.முருகேசன் கூறியதாவது-
9 டன்
துண்டு, துண்டுகளாக வெட்டப்பட்ட செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் 70 டன்களை எங்களுக்கு கொடுக்கரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டுள்ளது. இதுவரை நாங்கள் 9 டன் நோட்டுகளைப் பெற்றுள்ளோம்.
நோட்டுகள் தீர்ந்தபின் படிப்படியாக பெற்றுக்கொள்வோம். இதுவரை 1.5 டன் செல்லாத நோட்டுகளை பயன்படுத்தி ‘பைல்’, ‘கவர்’, அட்டை உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு கைதிகள் மூலம் ஆயிரம் ‘பைல்’ தயார் செய்யப்பட்டு வருகிறது.
அரசு பயன்பாடு
துண்டாக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் தண்ணீரில் ஊறவைக்கப்பட்டு கூலாக்கப்பட்டு, அதை ‘மோல்டு’களில்வார்க்கப்பட்டு, அட்டைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. எந்திரங்களைப் பயன்படுத்தாமல், முழுக்க கைகளால் இந்த பணிகள் நடக்கின்றன. இந்த அட்டைகள், ‘பைல்’கள் காதிகிராப்ட் கடைகளில் கிடைக்கும். மேலும், அரசின் பல்வேறு துறைகளின் பயன்பாட்டுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
25 பைல்கள்
இதில் அரசுப்பணிகள் அவசரம், சாதாரண பணி என்பதை குறிப்பதற்காக அட்டைகளில் சிவப்பு, உள்ளிட்ட வண்ணங்கள் பூசப்படுகின்றன. ஒரு கைதி மாதத்துக்கு 25 ‘பைல் பேட்’ தயாரிக்க முடியும். இதற்கான கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.160 முதல் ரூ.200 வரை வழங்கப்படுகிறது. கைதியின் திறமையைப் பொருத்து கூலித் தொகையை மாறும்.
1.50 லட்சம்
தமிழகத்தில் உள்ள வேலூர், சேலம், மதுரை உள்ளிட்ட சிறைகளிலும் கைதிகள் பைல் பேட் தயாரிக்கிறார்கள் ஆனால், செல்லாத ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி பைல் தயாரிக்கும் ஒரே சிறைபுழல் சிறை மட்டுமே. மாதம் ஒன்றுக்கு 1.50 லட்சம் பைல் பேட்கள் தமிழக சிறைகளில் இருந்து தயாரிக்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.