
மதுரையில் நாகேந்திரன் என்ற வாலிபர் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் ராக்கப்பன். இவரது மகன் நாகேந்திரன் (23). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி தினமும், நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் நாகேந்திரன் கையெழுத்திட்டு வருவார்.
இந்த நிலையில், நாகேந்திரன், காவல் நிலையம் சென்று கையெழுத்து போட்டுவிட்டு சென்றுள்ளார். பின்னர் டீ குடிப்பதற்காக நாகேந்திரன் டீ கடை ஒன்றுக்கு சென்றார்.
அப்போது, டீ கடைக்கு ஒரு கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. காரில் இருந்து இறங்கியவர்கள், டீ கடையில் இருந்த நாகேந்திரனை சுற்றி வளைத்து, அரிவாளால் வெட்டினர். இதில் நாகேந்திரன் ரத்த வெள்ளத்தில் பிணமானார். பின்னர் அந்த கும்பல் தப்பியோடியது.
இதைப் பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். கொலை குறித்து நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்துக்கு, பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அங்கு வந்த போலீசார், நாகேந்திரனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி, சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் வனிதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் அதன்படி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.