
மும்பையைப் போலவே, சென்னையிலும் தானியங்கி கதவுகளுடன், ஏ.சி. வசதி கொண்ட புறநகர் மின்சாரரெயில்கள் இயக்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏ.சி. ரெயில்
மும்பையில் புறநகர் பகுதிகளுக்கு தற்போது ஏ.சி. இல்லாத பெட்டிகளைக் கொண்டு மட்டுமே ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல்முறையாக, ஏ.சி. பெட்டிகளைக் கொண்டு புறநகர் ரெயில்வேசேவை மேற்கு ரெயில்வே சார்பில் தொடங்கப்பட உள்ளது.
மும்பையில் ஏ.சி. புறநகர் ரெயில்வே தொடங்கப்பட்ட பின், அதே போன்ற ரெயில் சேவை, கொல்கத்தா, சென்னை, செகந்திராபாத் நகரங்களுக்கும் விரிவுபடுத்த ரெயில்வே அமைச்சகம் முடிவுசெய்துள்ளது.
ஜன.1ந் தேதி
இது குறித்து ரெயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மும்பை புறநகர் பகுதிகளில்முதல் முறையாக தானியங்கி கதவுகளுடன் ,ஏ.சி.வசதி செய்யப்பட்ட பெட்டிகள் மூலம் ரெயில் சேவை கிறிஸ்துமஸ் அல்லது ஜனவரி 1ந்தேதியோ தொடங்கப்படும்.
10 முறை இயக்கப்படும்
முதல்கட்டமாக 12 பெட்டிகள் கொண்டதாகவும், சர்ச்கேட் முதல் விரார் ரெயில் நிலையம் வரை இயக்கப்படும். முதலில் நாள் ஒன்றுக்கு 10 முறை இயக்கப்பட்டு பின்னர் அதிகரிக்கப்படும். அதே சமயம், இந்த பகுதிகளில் சாதாரண ரெயில் சேவையும் தொடர்ந்து இயக்கப்படும், அது குறைக்கப்படாது. ஆனால், சாதாரண ரெயிலுக்கும், ஏ.சி. ரெயிலுக்கும் கட்டணத்தில் வேறுபாடு இருக்கும்.
சென்னைக்கும் வருகிறது
மும்பையில் தொடங்கப்பட்ட ஏ.சி. ரெயில் சேவை போல், கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, செகந்திராபாத் நகரங்களிலும் கொண்டு வர ரெயில்வே முடிவு செய்துள்ளது. இந்த ரெயில் பெட்டிகள் அனைத்தும் சென்னையில் உள்ள ஐ.சி.எப். தயாரித்துள்ளது’’ என்று தெரிவித்தார்.