மதுரை கலைஞர் நினைவு நூலகம் கடந்த 8 மாதங்களாக கட்டப்பட்டு வரும் நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு திட்டமிட்டிருந்தது. தற்போது 5வது தளத்தில் பணியாற்றி வந்த மேற்குவங்க தொழிலாளர் இக்பால் கீழே விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கலைஞர் நூலகத்தில் விபத்து
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக அரசு கடந்த ஆண்டு பதவியேற்றது. இதனைடுத்து திமுக தலைவர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் தலைமை செயலகத்தில் உள்ள சட்டபேரவை அரங்கில் கலைஞர் உருவப்படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மூலம் திறந்து வைத்தது. இதனையடுத்து துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு மூலம் ஓமந்தூரர் கட்டிட வளாகத்தில் கலைஞர் சிலையை திறக்கப்பட்டது. இதனையடுத்து மதுரையில் பிரம்மாண்டமான கலைஞர் நினைவு நூலகம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நூலக கட்டிடத்திற்காக கட்டுமானத்திற்கு 99 கோடியும், புத்தகங்கள் வாங்க 10 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் கணிணி போன்ற உபகரணங்கள் வாங்க 5 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டிருந்தது.
மேற்கு வங்க மாநில இளைஞர் பலி
அடித்தளம் மற்றும் ஏழு மாடிகள் கொண்ட இந்த கட்டிட பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பணிகளை துரிதபடுத்தப்பட்டு வேகமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் மதுரை நத்தம் சாலையில் கலைஞர் நூலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவரும் 5வது மாடி பகுதியில் கட்டிட பூச்சு பணியில் ஈடுபட்டு இருந்த மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியை சேர்ந்த இக்பால்(25) என்ற இளைஞர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இக்பால் உயிரிழந்தார். கட்டிட விபத்தில் உயிரிழந்த வடமாநில இளைஞர் இக்பாலின் உடலானது தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.கலைஞர் நூலக பணியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்