
ஈரோடு
கோபி அருகே மின்னல் வேகத்தில் வந்த சுற்றுலா வேன், சாலையோரத்தில் சென்ற ஆட்டுக் கூட்டத்தில் புகுந்து மோதியதில் 34 ஆடுகள் உள்பட தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளிகள் மருதாச்சலம் (60), கருப்பணன் (48), நாகராஜ் (49), செல்வம் (50).
தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியால் இவர்கள் ஒவ்வொரு ஊராகச் சென்று பட்டி அமைத்து ஆடுகளை மேய்த்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையத்தில் பட்டி அமைத்து ஆடுகளை மேய்த்தனர்.
கோபி அருகே உள்ள காசிபாளையம் பகுதி பசுமையாக தென்பட்டதால் அங்கு பட்டி அமைத்து ஆடுகளை மேய்க்கலாம் என சக தொழிலாளர்களிடம் மருதாச்சலம் கூறியதால் அவர்கள் காசிபாளையம் செல்ல முடிவு எடுத்தனர்.
அரியப்பம்பாளைத்தில் இருந்து காசிபாளையம் நோக்கி சத்தி - ஈரோடு சாலையில் ஆடுகளை ஓட்டிக்கொண்டு நேற்று அதிகாலைச் சென்றனர்.
கொடிவேரி அணை பிரிவு அருகே 5.30 மணியளவில் சென்றபோது அந்த வழியாக வந்த சுற்றுலா வேன் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறியபடி சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டுக் கூட்டத்துக்குள் அதிவேகமாக புகுந்தது. அந்த வேன் மருதாச்சலம் மீதும் பயங்கரமாக மோதியது.
இதைப் பார்த்த கருப்பணன், நாகராஜ், செல்வம் ஆகியோர் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து விலகி ஓடினர். இதனால், அவர்கள் மீது வேன் மோதப்படாமல் தப்பித்தனர். ஆனால், இந்த விபத்தில் 34 ஆடுகள் சம்பவ இடத்திலேயே மடிந்தன. 16 ஆடுகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும், இந்த மோதலால் படுகாயம் அடைந்த மருதாச்சலத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டுச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மருதாச்சலம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கடத்தூர் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.