
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில், விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுவன் தெப்பக் குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரைத் தேடிவந்த உறவினர்கள், தெப்பக் குளத்தில் பிணமாய் மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூர் அடுத்துள்ளது மானமதி ஈச்சம்பல்லம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி சசிகலா. இவர்களுடைய மகன் ரித்தீஷ் (6).
ரித்தீஷ், திருப்போரூரை அடுத்த கண்ணகப்பட்டு ஆதி திராவிடர் தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சசிகலா, தனது மகன் மற்றும் மகளுடன் திருப்போரூரை அடுத்த சிறுதாவூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு தெப்பக்குளம் அருகில் உள்ள ரேசன் கடைக்கு சசிகலாவின் தாய், தனது பேரன், பேத்தியை அழைத்துச் சென்றுள்ளார்.
ரேசன் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு பேத்தியுடன் திரும்பும்போதுதான் தனது பேரன் ரித்தீஷ் காணவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அந்தப் பகுதி முழுவதும் தேடியும் கிடைக்காததால் ரித்தீஷை யாராவது கடத்தி இருக்கலாம் என்று நினைத்து தனது மகளுடன் வந்து திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின்பேரில் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் காவலாளர்கள் வழக்குப்பதிந்து ரித்தீஷை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை தெப்பக் குளத்தில் ரித்தீஷ் பிணமாக மிதந்ததைக் கண்ட அந்த பகுதி மக்கள் காவலாளர்களுக்குத் தகவல் அளித்தனர். உடனே, நிகழ்விடத்துக்கு வந்த காவலாளர்கள், ரித்தீஷ் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், காவலாளர்கள் இதுகுறித்து நடத்திய விசாரணையில், "ரேசன் கடைக்கு பாட்டியுடன் வந்த ரித்தீஷ், அங்கு விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்து இறந்திருப்பது" தெரிய வந்தது.